You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
8 வயதுக் குழந்தை, பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர்
எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது.
ஜனவரி 17 காலை, முகம்மது யூசூஃப் புஜ்வாலா, தமது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது, அவரது பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் அவரிடம் ஓடிவந்து அவரது 8 வயது மகள் அசிஃபா பானுவின் சடலம் சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் புதரில் கிடப்பதாக சொன்னார்.
பிபிசியிடம் பேசிய 52 வயதான புஜ்வாலா "என் மகளுக்கு ஏதோ பயங்கரம் நடந்துள்ளது தெரிந்தது," என்றார். பலவீனமான குரலில் 'அசீஃபா...' என்று முனகியபடியே அவரது அருகே அமர்ந்திருந்தார் அவரது மனைவி நசீமா பிபி.
இமலயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் புஜ்வாலா. பலாத்காரம் செய்து, சிறுமி கொல்லப்பட்ட சம்பவம், இந்தச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்துக்களை பெரும்பாண்மையாகக் கொண்ட ஜம்மு மற்றும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் இரண்டுக்கும் இடையிலான பிளவைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவுடன் ஒரு கொந்தளிப்பான உறவைக் கொண்டுள்ளது. இந்திய ஆட்சிக்கு எதிராக இந்தப் பகுதியில் 1989 முதல் ஆயுதக் கிளர்ச்சி நடந்து வருகிறது.
போலீஸ் அதிகாரிகள் கைது
ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் வயது முதிராத ஒருவர் உள்ளிட்ட எட்டு ஆண்களை போலீசார் இந்த குற்றம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்தக் கைதுகளை எதிர்த்து ஜம்முவில் போராட்டங்கள் நடந்தன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீசார் நீதிமன்றத்தில் நுழைவதை வழக்குரைஞர்களே தடுக்க முயன்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி மாநிலத்தை ஆளுகிறது.
ஜம்முவில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் ஆசிஃபாவின் குடும்பம் வசிக்கிறது. ஆசிஃபா காணாமல் போன ஜனவரி 10 அன்று அவள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை ஓட்டிவரச் சென்றதாக அவரது தாய் நினைவுகூர்கிறார். குதிரை வீடு திரும்பியது. ஆனால், ஆசிஃபா திரும்பவில்லை.
தகவலை கணவருக்குச் சொல்கிறார் அவரது தாய். அவரும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும், டார்ச் விளக்குகள், லாந்தர்கள், கோடரிகள் ஆகியவற்றோடு காட்டுக்குள் சென்று இரவு முழுக்க தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் ஆசிஃபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரண்டு நாள்கள் கழித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் உதவ முன்வரவில்லை என்கிறார் புஜ்வாலா. எட்டு வயதான அந்தச் சிறுமி ஆசிஃபா ஏதேனும் ஒரு பையனோடு ஓடிப்போயிருக்கலாம் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாக அவர் கூறுகிறார்.
சாலை மறியல் போராட்டம்
குஜ்ஜர்கள் நெடுஞ்சாலையை மறித்துப் போராடத் தொடங்கினர். இதையடுத்து இரண்டு அதிகாரிகளை தேடுவதற்காக நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தம் போலீசுக்கு ஏற்பட்டது.
அப்படி நியமிக்கப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான தீபக் கஜூரியாவே இந்த வழக்கில் பிறகு கைது செய்யப்பட்டார்.
ஐந்து நாள்களுக்குப் பிறகு ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "அவள் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவளது கால்கள் முறிக்கப்பட்டிருந்தன. நகங்கள் கருத்துப் போயுள்ளன. கையிலும், விரல்களிலும் நீலம் மற்றும் சிவப்பு நிறக் குறிகள் இருந்தன" என்கிறார் ஆசிஃபாவின் தாய் நசீமா.
ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு ஆறு நாள்கள் கழித்து, ஜனவரி 23-ம் தேதி, மாநில குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி. இது மாநிலப் போலீசின் சிறப்புப் பிரிவு.
கோயில் ஒன்றில் பல நாள்கள் ஆசிஃபா கட்டிவைக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து தரப்பட்டதாகவும் புலன்விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். பல நாள்கள் ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாக போலீசின் குற்றப்பத்திரிகை கூறுகிறது. கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டபின், தலையில் கல்லால் தாக்கப்பட்டிருக்கிறாள் ஆசிஃபா என்கிறது குற்றப்பத்திரிகை.
ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சாஞ்சி ராம் (60) என்பவர் போலீஸ் அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக் ராஜ் மற்றும் கஜூரியா ஆகியோர் உதவியோடு இந்தக் குற்றத்தை திட்டமிட்டுச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சாஞ்சி ராமின் மகன் விஷால், இளைய வயதினரான அவரது சகோதரி மகன் ஆகியோரும் வன்புணர்வு மற்றும் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
கஜூரியா உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் ரத்தம் தோய்ந்த, ஆசிஃபாவின் ஆடைகளை துவைத்த பிறகு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியதாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.
குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு வெளியேற வைக்கவேண்டும் என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களின் நோக்கம் என்று விசாரணை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
பொது நிலங்களிலும், காடுகளிலும் குஜ்ஜர் சமூகத்தவர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். இந்த நடவடிக்கையால் சமீப காலமாக இந்துக்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
ஆசிஃபா குடும்பத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பழங்குடி உரிமை செயற்பாட்டாளரும், வழக்குரைஞருமான தலிப் ஹூசைன் தாம் உள்ளூர் போலீசால் கைது செய்யப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்.
தற்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்முவின் மக்கள் தொகை சமன்பாட்டினை இந்த முஸ்லிம் நாடோடிகள் மாற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகப் போராடிய வழக்குரைஞர்களில் ஒருவரான அங்கூர் ஷர்மா கூறுகிறார்.
தங்களது காடுகளையும், நீராதாரங்களையும் அவர்கள் ஆக்கிரமிப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்தக் குற்றம் ஜம்முவில் பெரிய கவனத்தை ஈர்க்காதபோதும், ஸ்ரீநகரில் செய்தித் தாள்கள் முதல்பக்கச் செய்திகளாக இந்தக் குற்றம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன.
எதிர்க் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க குஜ்ஜர் இன எம்.எல்.ஏ.வான மியன் அல்டாஃப் ஆசிஃபாவின் படங்கள் வந்த செய்தித் தாளைக் காட்டி மாநில சட்டமன்றத்தில் ஆவேசமாக வாதிட்டு இந்த வழக்கில் விசாரணை கோரினார். ஆனால், இது ஒரு குடும்பப் பிரச்சினை என்று குறிப்பிட்ட பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் ஜஸ்ரோட்டியா, அல்டாஃப் இதை அரசியல்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
ஆசிஃபாவின் இறுதிச் சடங்கில்...
சில ஆண்டுகளுக்கு முன்பு குஜ்ஜர்கள் வாங்கி இடுகாடாகப் பயன்படுத்திவந்த இடத்தில் ஆசிஃபாவை புதைக்க குஜ்ஜர்கள் எத்தனித்தபோது, இந்து வலதுசாரிகள் சூழ்ந்துகொண்டு அங்கே புதைத்தால் வன்முறை நடக்கும் என்று மிரட்டியதாக கூறுகிரார் புஜ்வாலா. இதையடுத்து தாங்கள் ஏழு மைல் நடந்து சென்று வேறொரு கிராமத்தில் புதைத்ததாக அவர் மேலும் கூறுகிறார்.
சில ஆண்டுகள் முன்பு ஒரு விபத்தில் அவரது இரண்டு மகள்களும் இறந்துவிட்டனர். இதையடுத்து அவரது மனைவி வலியுறுத்தியதால் அவர் தமது மைத்துனரின் மகளான ஆசிஃபாவை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
ஆசிஃபாவை ஒரு பாடும் பறவை என்றும், மான் போல என்றும் வருணிக்கும் நசீமா தாங்கள் பயணத்தில் இருக்கும்போது ஆசிஃபாவே மந்தையைப் பார்த்துக் கொண்டதாக கூறுகிறார்.
அதனாலேயே அவள் தங்கள் சமூகத்தின் செல்லப்பிள்ளையானாள் என்றும், தங்கள் பிரபஞ்சத்தின் மையம் அவளே என்றும் கூறுகிறார் நசீமா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்