ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இறங்குகிறது 'வாட்சப்'
- எழுதியவர், டெவினா குப்தா
- பதவி, பிபிசி
இந்தியாவின் மிகப்பெரிய உடனடி தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப் இந்த மாத இறுதியில் இணையதள பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

பட மூலாதாரம், GABRIEL BOUYS / Getty images
சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2.6 லட்சம் கோடி இந்திய ரூபாய்) அளவுக்கு இணையதள பணப்பரிமாற்றம் நடக்கும் சந்தை உள்ள இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும்?
சில பயனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தனது சேவையை வாட்சப் தற்போது சோதனை செய்து வருகிறது.
பெரும்பாலனவர்கள் செல்பேசி மற்றும் திறன்பேசி மூலம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியாவில் வாட்சப் செயலிக்கு சுமார் 20 கோடி பயனாளிகள் உள்ளனர்.
செல்பேசிகள் மூலம் செய்யப்படும் இணையதள பணப்பரிமாற்றத்தில் முன்னணியில் இருக்கும் பேடிஎம் (Paytm) நிறுவனத்துக்கு இது வருத்தம் தரும் செய்தியாக உள்ளது.
வாட்சப் அறிமுகம் செய்துள்ள சேவை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதல்ல என்று பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கூறியுள்ளார். வாட்சப் பரிமாற்றங்களுக்கு கடவுச்சொல் கேட்பதில்லை என்கிறார் அவர். அதை மத்திய அரசு மறுத்துள்ளது.
சுமார் 30 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ள பேடிஎம் செயலி மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் இணையதள பணப்பரிமாற்றங்கள் நடக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2016இல் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபின் பேடிஎம் பயனாளிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்தது. அதன்மூலம் பரிமாற்றம் செய்யப்படும் பணத்தின் அளவு 700% அதிகரித்தது.
பேடிஎம் ஏன் குற்றம் சாட்டுகிறது?
ஃபேஸ்புக் நிறுவனம் 'ஃபிரீ பேஸிக்ஸ்' என்ற பெயரில் இலவச இணைய சேவை வழங்கி, அதில் குறிப்பிட்ட இணையதளங்களை மட்டுமே பார்க்க அனுமதித்ததுபோல இம்முறையும் செய்ய முயல்கிறது என்கிறது பேடிஎம்.
ஃபிரீ பேஸிக்ஸ் முறை இணையச் சமநிலைக்கு எதிராக இருப்பதாக பரவலான விமர்சனங்கள் எழுந்ததால் அது தடை செய்யப்பட்டது.
தங்களுடன் போட்டியிடும் செயலிகளை தங்கள் தளத்தில் தடுக்கவே வாட்சப் முயலும் என்று பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தீபக் அப்போட் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
எனினும், பிற போட்டி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அந்தக் கருத்தில் உடன்படவில்லை. "இந்தியாவில் இணையதள பணப் பரிமாற்ற சந்தை 5% - 10% மக்களையே சென்றடைந்துள்ளது. புதிதாக இன்னொரு நிறுவனம் வருவது நல்லதுதான்," என்கிறார் இன்னொரு செல்பேசி மூலம் இணையதள பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனமான மொபிவிக் நிறுவனத்தின் நிறுவனர் பிபின் பிரீத் சிங்.
"பணப் பரிமாற்றங்களின்போது ஏதேனும் தவறு நடந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய உள்நாட்டு நிறுவனங்களுக்கு பல களப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், அந்த விடயத்தில் சர்வதேச நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது," என்கிறார் அவர்.
வாட்சப் வழங்கும் சேவை என்ன?
ஒரு வங்கியின் கணக்கில் இருந்து இன்னொரு வங்கியின் கணக்குக்கு பரிமாற்றம் செய்யும் யு.பி.ஐ வசதியையே வாட்சப் செய்யப்போகிறது. பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கை செயலியுடன் நேரடியாக இணைக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எனினும், பேடிஎம் வழங்கும் திரைப்படம், பயணம், உணவு விடுதி உள்ளிட்ட சேவைகளையும் வழங்குவதே வாட்சப் நிறுவனத்துக்கு சவாலாக இருக்கப்போகிறது.
இது பேடிஎம் நிறுவனத்துக்கு அச்சுறுத்தலா?
பேடிஎம் செயலி இந்தியாவில் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் தேநீர் விற்பவர்கள் வரை அதைப் பயன்படுத்துகிறார்கள். வங்கிச் சேவைகளையும் வழங்கி வரும் அந்த நிறுவனம், எதிர்காலத்தில் காப்பீட்டு சேவையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வாட்சப் நிறுவனத்திடம் செலவிட அதிக அளவில் பணம் உள்ளது. வாட்சப் பணப் பரிமாற்ற சேவையைப் பயன்படுத்துபவர்கள் வழங்கும் தர மதிப்பீடும் அதிகமாக உள்ளது.
"நாங்கள் வாட்சப் செயலியையும் ஒரு போட்டியாக எடுத்துக்கொள்வோம். யு.பி.ஐ பணப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தாத 90% மக்கள் இந்தியாவில் உள்ளனர். எனவே, சந்தையைக் கைப்பற்ற நாங்களும் முயல்வோம்," என்று கூறுகிறார் தீபக் அப்போட்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












