முன்னாள் ஜேம்ஸ் பாண்டை ஏமாற்றிய இந்திய நிறுவனம்
இந்திய நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றி விட்டதாக ஜேம்ஸ் பாண்டாக நடித்த பியர்ஸ் ப்ரொஸ்னன் இந்திய அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பான் பஹார் எனும் புகையிலை விளம்பரத்தில் பியர்ஸ் நடித்து இருந்தார். இந்திய சட்டமொன்று புகையிலை விளம்பரங்களை தடை செய்கிறது.
அதனால், புகையிலை உட்கொள்வதை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்தது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது .
பியர்ஸிடம் அந்த நிறுவனம், பான் பஹாரின் அபாயகரதன்மைகள் குறித்து விளக்கவில்லை என்று பியர்ஸ் கூறியதாக ஒரு மூத்த அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஒப்பந்தம் முடிந்துவிட்டது
பியர்ஸுக்கும் அந்த நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற விளம்பரத்திற்கு எதிரான முயற்சிகளில் தானும் உதவுவதாக பியர்ஸ் எழுத்து வடிவத்தில் கொடுத்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத் துறை அதிகாரி எஸ்கே அரோரா தெரிவித்தார்.
ஏமாற்றும் செயல்
இந்த விளம்பரம் வெளியான 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பலர் பியர்ஸ் எப்படி இதுமாதிரியான விளம்பரங்களில் நடிக்கலாம் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

பட மூலாதாரம், @DENNEHAS
அதற்கு, பியர்ஸ் அளித்த ஒரு விளக்கத்தில், அந்த நிறுவனத்தின் வாய் துர்நாற்றத்தை போக்கும் தயாரிப்பில் நடிக்கதான் நான் ஒப்பந்தமானேன் என்று கூறி இருந்தார்.
தன் படத்தினை பான் விளம்பரங்களில் பயன்படுத்துவது ஏமாற்றும் செயல் என்றும், தனது படத்தினை பயன்படுத்துவதை அந்த நிறுவனம் உடனே நிறுத்த வேண்டும் என்றும் பியர்ஸ் குறிப்பிட்டு இருந்தார்.
அப்போது அவர் அளித்த ஓர் அறிக்கையில், நானே என் முதல் மனைவி, மகள் மற்றும் பல நண்பர்களை கேன்சர் நோயினால் இழந்திருக்கிறேன். பெண்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், அவர்களின் துயர் துடைப்பதிலும் நான் முனைப்பாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனாலும் இன்னும் அந்த விளம்பரம் திரையரங்கங்களில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
விளக்கம்
அந்த விளம்பரம் முதல்முதலாக ஒளிபரப்பான காலகட்டத்தில் பான் பஹாரினை தயாரிக்கும் அசோக் அண்ட் கோ நிறுவனம், தங்களது தயாரிப்பில் புகையிலை, நிக்கோடின் இல்லை. பொதுமக்கள் தவறாக புரிந்துக் கொண்டுவிட்டார்கள் என்று பிபிசியிடம் கூறி இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












