எஸ்.பி.ஐ முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி வரை - பதற வைக்கும் வங்கி முறைகேடுகள்
- எழுதியவர், ருஜுது லுக்துகே
- பதவி, பிபிசி மராத்தி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,360 கோடி ரூபாய் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்திய அரசு, இந்திய வங்கிகளில் 2012 -2016 ஆகிய காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி அதிர்ச்சி தரும் தரவுகளை அடுக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 2012-2016 இடையிலான காலக்கட்டத்தில் மட்டும், 22,743 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பொதுத் துறை வங்கிகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுகிறார்.
இந்திய வங்கிகள் குறித்து ஆய்வு செய்த பெங்களூர் இந்திய மேலாண்மை கல்வி கழகம் (ஐ.ஐ.எம்) ஓர் அறிக்கையை அளித்தது. வெள்ளிகிழமை நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, இந்த அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசினார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
அந்த அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில், 455 முறைகேடான பரிவர்த்தனைகள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நடைபெற்றதாக கண்டறியப்பட்டது. அதுபோல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வில் 429 பரிவர்த்தனைகளும், ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 244 பரிமாற்றங்களும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் 237 பரிவர்த்தனைகளும் முறைகேடானவை என்று விவரிக்கிறது அந்த அறிக்கை.

பட மூலாதாரம், Getty Images
இந்த முறைகேடான பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை வங்கி ஊழியர்களின் துணையுடனே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறது அந்த அறிக்கை.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 60 ஊழியர்களும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் 49 ஊழியர்களும், ஆக்சிஸ் வங்கியின் 35 ஊழியர்களும் இந்த முறைகேடான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்கிறது அந்த தரவு.
கடன் தருவதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி, இவாறு முறைகேட்டில் ஈடுபட்ட தனது 20 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறி உள்ளது.
இந்தியாவின் 5 மிகப்பெரிய வங்கி முறைகேடுகள்:
2011
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், மற்றும் ஐ.டி.பி.ஐ அகிய வங்கிகளின் நிர்வாகிகள் 10 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி 1,500 கோடி ரூபாய் அளவிற்கு அந்த போலி கணக்குகளுக்கு கடன் வழங்கி உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டு, சி.பி.ஐ ஒரு விசாரணை நடத்தி இந்த முறைகேட்டினை வெளிக் கொண்டுவந்தது.
2014
வைப்புத் தொகையில் 700 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என பல பொதுத் துறை வங்கிகளுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு 9 வழக்குகளை பதிவு செய்தது மும்பை போலீஸ். அதே ஆண்டு, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பிபின் வோஹ்ரா, போலியான ஆவணங்கள் கொடுத்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,400 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு மத்தியில், அதே ஆண்டில், சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்கே ஜெயின் லஞ்சம் பெற்று ரூபாய் 8,000 கோடி கடன் கொடுத்தார் என்ற தகவல் வெளியே வந்தது.
விஜய் மல்லையாவை கடனை திரும்ப செலுத்தாதவர் என பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் அறிவித்தன.
2015
2015 ஆம் ஆண்டு வெளிநாட்டு பரிவர்த்தனை ஊழலுக்கான ஆண்டு. வெவ்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் ஹாங்காங்க் கார்ப்பரேஷன் உட்பட வெளிநாட்டில் உள்ள பல போலியான நிறுவனங்களுடன் பரிவர்த்தனை மேற்கொண்டு இருக்கிறார்கள் என தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய தொகை 6000 கோடி ரூபாய்.
2016
சிண்டிகேட் வங்கியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்து செல்வதற்கு நான்கு மோசடிப் பேர்வழிகள் ஒன்றாக இணைந்தனர். 380 போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, போலி காசோலைகள், புரிந்துணர்வுக் கடிதங்கள், எல்.ஐ.சி. பாலிசிகள் மூலம் இந்த போலி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டன.
2017
2017ஆம் ஆண்டின் சிறப்பு, விஜய் மல்லையா மீதான வழக்குதான். 9,500 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, விஜய் மல்லையா மீது வழக்கு பதிந்தது சிபிஐ. அவர் 2016ஆம் ஆண்டே நாட்டைவிட்டு தப்பிச் சென்று இருந்தார். இப்போது, இங்கிலாந்தில் வசித்து வரும் அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இதே ஆண்டு, அடுத்த சில மாதங்களில், வின்சம் டைமண்ட்ஸ்க்கு எதிராக 7,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சிபிஐ இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்தது.
கொல்கத்தா தொழிலதிபர் நிலேஷ் பரேக், குறைந்தது 20 வங்கிகளை ஏமாற்றி அவர்களுக்கு இழப்பு உண்டாக்கியதாக 2017 ஆம் ஆண்டு சி.பி.ஐ-யினால் கைது செய்யப்பட்டார். வங்கிகளை ஏமாற்றிப் பெற்ற கடன் தொகையை ஹாங்காங்க், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு மடைமாற்றினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ராவின் முன்னாள் மண்டலத் தலைவர் மீதும், சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், 836 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












