கமல் அரசியல் பிரவேசம்: நேற்று ரஜினி, இன்று விஜயகாந்த்

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இன்று காலை (திங்கட்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

நேற்றைய தினம் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திலும், நடிகர் ரஜினி காந்தையும் கமல் ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்று விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

தனது அரசியல் பயணத்திற்கு அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், சகோதரர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறப்போவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 21 தனது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக கமல் ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம், கருணாநிதியிடம் மக்கள் மீதான அக்கறை, தமிழ் மற்றும் அறிவுகூர்மை போன்ற தன்மைகளை கற்றுக்கொள்ளப் போவதாக தெரிவித்த கமல் ஹாசன், அவரை சந்திப்பது முதல் முறை அல்ல என்றும் தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணியில் இணைவாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ''நான் பல விதமான அரசியல் கொள்கைகளை தெரிந்துகொண்டு அவற்றில் இருந்து சிறந்தவற்றை எடுத்துக்கொள்வேன். கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அடுத்ததாக ஆட்சி அமைப்பதில் அனைவருக்கும் கனவு உள்ளது. எனது கொள்கையை அவர்கள் தெரிந்துகொண்டு கூட்டணி வைப்பது பற்றி அவர்களும் முடிவுசெய்ய வேண்டும்,'' என்றார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக திமுக கூட்டவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கமலை அழைத்ததாகவும் அவரும் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்காக சேவை செய்யவந்துள்ளதாகவும் மக்கள் சந்தோசப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த சில மணிநேரத்தில் கமல் ஹாசன் கலைஞரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்று அவர் தெரிவித்திருந்தார்.
"அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன்," என்று சந்திப்புக்கு பின் கமல் ஹாசன் தெரிவித்தார்.

ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்றும் அரசியல் ரீதியானது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமது அரசியல் பயணம் சிறப்பாக அமைய ரஜினி வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நல்லது செய்வதுதான் முக்கியம்," என்று இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு,"காலம்தான் அதற்கு பதில்சொல்லும்," என்று கமல் ஹாசன் கூறினார்.
"திரைப்படங்களில்கூட என்னுடைய பாணி வேறு கமல் பாணி வேறு. அதேபோல அரசியலிலும் எங்கள் பாணி வேறாகத்தான் இருக்கும்," என்று ரஜினிகாந்த் கூறினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












