கமலுக்கு தமிழகத்தை தாண்டிய அரசியல் சாத்தியமா?

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தனது அரசியல் கட்சியின் விவரத்தை நேற்று வெளியிட்டார் கமல் ஹாசன். ஆறு கைகள் ஒன்றோடொன்று பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதன் நடுவில் நட்சத்திரம் ஒன்று இருப்பது போலவும் உள்ள கொடியை தனது கட்சிக் கொடியாக அறிமுகம் செய்தார்கமல்.

தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

பட மூலாதாரம், Getty Images

கட்சியின் கொடி மற்றும் பெயர் காரண விளக்கமளித்த கமல் ஹாசன், ஆறு கைகள் தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களை குறிக்கும் என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல்?

பிற மாநிலங்களில் அரசியல் தடம் பதிக்க முயல்கிறாரா கமல்? அல்லது திராவிட நாடு என்ற கொள்கையை முன் வைக்கிறாரா என பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம்.

"சி்றுபிள்ளைத்தனமான செயல்"

"இது வழக்கம்போல் குழப்பமானதாகவே உள்ளது. திராவிட கொள்கையை மீண்டும் உயிர்பிப்பது சாத்தியமற்றது. திராவிடம் என்று பேசுவது தமிழ்நாட்டில் முடிந்து போன ஒரு விஷயம். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்கள் சென்னை மாகாண காலத்திலேயே திராவிடம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே, இன்று திராவிடம் என்ற அடையாளத்தின் மூலம் அதை ஒன்று சேர்ப்பது ஒருவித சுய ஏமாற்றுதனமாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி கட்சியை நடத்த வேண்டும் என்றால் அனைத்துக்கு பொதுவாக கட்சியின் பெயரையும் வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே அவர் குழப்பவாதியாக இருக்கிறார் என்பதன் அடையாளமாகதான் இது உள்ளது என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய ஆழ செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி காலூன்ற நினைக்கிறாரா கமல்?

"ஒரு கட்சியை அகில இந்திய அளவில் தொடங்குவதில் தவறில்லை ஆனால், ஒரு கொடியில் உள்ள சின்னம் ஆறு மாநிலங்களையும் குறிக்கும் என கமல் கூறியது சிறுபிள்ளைத்தனமான செயலாகத் தான் தோன்றுகிறது" என்கிறார் ஆழி செந்தில்நாதன். மேலும் இது ஒரு அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

கொடியை பொறுத்தவரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது அவ்வகையில் திராவிடத்தை உணர்த்தும் விதமாக கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை பயன்படுத்தியது புரிந்துக் கொள்ள முடிகிறது ஆனால் கொடியில் கைகளை பயன்படுத்தியது ஒரு குழப்பத்தின் வடிவமாகவே பார்க்க முடிகிறது என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

"அவகாசம் தர வேண்டும்"

எந்த ஒரு கட்சியும் தங்கள் மாநிலம், மாநிலத்தின் பிரச்சனை குறித்தே பேசுவார்கள், பிற மாநிலங்களை சேர்த்து இதுவரை யாரும் பேசியதில்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி.

மொழி பிரச்சனைக்காக அந்த அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததே, தவிர யாரும் ஆறு மாநிலங்களையும் இணைத்து குரல் கொடுத்தது இல்லை என்கிறார் அவர்.

தொடர்புடைய செய்திகள்:

ஆறு மாநிலங்களை இணைத்து பேசினால் அதிக உரிமை கோர கூடும் என்ற தொனி கமலின் பேச்சில் தென்பட்டது என்று கூறும் மணி, நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் கோருவதாக தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் கமலுக்கு சிறிது நேரத்தை வழங்க வேண்டும். பின்பே, அவரின் அரசியல் பாதையை கணிக்க முடியும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் மணி.

காவிரி சிக்கலை தீர்ப்பதற்கான வழி என்ன?

தமிழக மக்களின் பிரச்சனைகள், மத்திய அரசுடனான பிரச்சனைகள் ஆகியவற்றைக் காட்டிலும் மாநில ஊழலை மையப்படுத்திதான் அவரின் பேச்சுகள் இருந்தன எனவே, மாநில அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாடகவே அது தெரிகிறது எனவே கட்சிக் கொடி ஆறு மாநிலங்களை குறிப்பதாக கூறுவது குழப்பமான நிலைப்பாட்டையே காட்டுவதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் தியாகு.

"இந்திய தேசிய கட்சிகள் என்று கூறும் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளாகத்தான் தங்களின் முடிவுகளை எடுக்கின்றன."

காணொளிக் குறிப்பு, கமலின் புதிய கட்சி: மக்களின் கருத்து என்ன?

"அதே போன்று அதிமுக, திமுக போன்ற கட்சிகள் மாநில கட்சிகளாக இருந்த போதிலும் சில பிரச்சனைகளில் அனைத்திந்திய கட்சிகளின் நிலைப்பாடுகளை எடுக்கின்றன."

காவிரி சிக்கலை பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என கூறும் கமல் ஹாசன். பேசி தீர்த்துக் கொள்வதற்கான கோட்பாடுகளை கூறவில்லை. இதற்கு முன்னால் இருந்த முதல்வர்கள் எடுக்காத வழிமுறைகளில் இவர் எதை காட்டப் போகிறார் என்ற தெளிவற்ற நிலையே தென்படுகிறது என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் தியாகு.

தமிழகத்தை தாண்டி காலூன்ற நினைக்கிறாரா கமல்?

"தமிழகத்தை தாண்டிய பார்வை"

இன்று புதிதாக ஒரு கட்சி தொடங்குபவர்கள் பிற மாநிலங்களுக்கோ அல்லது அகில இந்திய அளவிலோ செல்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல என்று கூறும் பத்ரி சேஷாத்ரி, டெல்லியில் அபார வெற்றி பெற்ற பிறகும் ஹரியானாவில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சியை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்:

"கமல் தென்னிந்தியாவை குறிப்பிட்டது, தனது பார்வை தமிழகத்தை தாண்டிய பார்வை என்பதை புரிய வைக்கும் முயற்சி என்றாலும், கட்சியின் பெயர் தமிழ் அடிப்படையிலே இருப்பது அதற்கு மாறாக உள்ளது" என்று பதிப்பாளரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"தென்னிந்தியா என்று குறிப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இன்றளவில் அவரின் கவனம் தமிழகமாகதான் இருக்கும்" என்கிறார் பத்ரி சேஷாத்ரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :