"நிஜ கதாநாயகனாக திகழ்கிறார்": கமலுக்கு கெஜ்ரிவால் புகழாரம்
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை முதல் நடந்து வரும் கட்சி பெயர் அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று நடிகர் கமல் ஹாசன் அறிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் இணைந்த கைகள் கொண்ட சின்னம் பொறித்த கொடியை ஏற்றிவைத்த கமல் ஹாசன், தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார்.
தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை டிவிட்டர் வலைத்தளத்திலும் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கமலின் புதிய கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டார்.
சென்னை, காஞ்சிபுரம் மதுரை, தஞ்சாவூர், கோவை போன்ற பல மாவட்ட செயலாளர்களின் பெயர்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் தனது கட்சி கொள்கைகளை விளக்கி இந்த கூட்டத்தில் கமல் ஹாசன் உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, இன்று காலையில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், பின் மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தொடர்ந்த இந்த பயணத்தில் தற்போது மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
'நிஜ கதாநாயகன் கமல்' கெஜ்ரிவால்

மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால், ''இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை கமல் ஹாசன் தொடங்கியுள்ளார். ஒரு திரையுலக பிரபலமாக நான் எப்போதுமே அவரது ரசிகனாக இருந்துள்ளேன் ஆனால், இப்போது அவர் களத்தில் நின்று போராடும் நிஜ கதாநாயகனாக திகழ்கிறார்'' என்று கமலுக்கு கெஜ்ரிவால் புகழாரம் சூட்டினார்.
கடந்த சில மாதங்களாக, ஏன் வருடங்களாக கமலின் மிக தைரியமான செயல்பாடு பாராட்டுகளை பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், போராட தயாராகிவிட்ட தமிழக மக்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
''அதே வேளையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு ஊழல் கட்சிகளிடையே சிக்கி தவித்துவரும் தமிழக மக்களுக்கு இனிவரும் தேர்தல்களில் வாக்களிக்க ஒரு நேர்மையான கட்சி கிடைத்துள்ளது. அந்த நேர்மையான கமலின் கட்சிதான் '' என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
''நாங்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் நடந்த தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவற்றை புறக்கணித்து எங்கள் கட்சிக்கு டெல்லி மக்கள் வாக்களித்தனர் என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்துகிறேன்'' என்று கூறிய கெஜ்ரிவால், திமுக மற்றும் அதிமுகவை தூக்கி எறிய தயராகிவிட்ட தமிழக மக்கள் கமலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விதித்தார்.
பிற செய்திகள்:
- தொடங்கியது கமலின் அரசியல் பயணம் (புகைப்பட தொகுப்பு)
- அரசியலில் இறங்கும் ரஜினி - கமல்: நடிகைகள் ஆதரவு யாருக்கு?
- “நான்... சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு”
- பெண்களால் சொல்ல முடியாத, சொல்லப்படாத விடயங்களின் கலை வடிவம்
- இலங்கை: பேருந்தில் வெடிப்பு -19 பேர் காயம்
- வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












