இடதுமில்லை, வலதுமில்லை - மய்யம் கொண்ட கமல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆர்.முத்துக்குமார்
- பதவி, எழுத்தாளர்
(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
இடதுபக்கம் போகப்போகிறாரா, வலதுபக்கம் நகரப்போகிறாரா, திராவிடப் பாதையில் செல்லப்போகிறாரா என்று கமலஹாசனைச் சுற்றிப் பல கேள்விகள் சூழ்ந்திருக்க, "இடதுமில்லை, வலதுமில்லை, மையத்தில் இருப்போம்" என்று சொல்லி, "மக்கள் நீதி மய்யம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் கமலஹாசன்.
மதுரையில் வைத்து கட்சி தொடங்கிய கையோடு, கட்சியின் கொடியையும் அறிவித்து, நிர்வாகிகள் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறார். கூடவே, கட்சிக் கொள்கைகள் என சில அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். இந்த இடத்தில் கமலஹாசனையும் அவருடைய கட்சி, கொடி, கொள்கை பற்றியும் மூன்று முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
கமலஹாசன் கட்சிக்கொடி எப்படி இருக்கிறது?

கருப்பு, சிவப்பு நிறங்கள் இல்லாமல் தமிழகத்தில் கட்சி தொடங்குவது விஷப்பரீட்சை எழுதுவதற்கு ஒப்பானது என்பதில் கமலஹாசனுக்கும் நம்பிக்கையிருக்கிறது என்பது அவருடைய கட்சிக்கொடியில் இருக்கும் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் வெளிப்படுத்துகின்றன. கொடியில் வட்டமாக இணைக்கப்பட்ட ஆறு கைகளும் நடுவில் நட்சத்திரமும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களையும் அதன் ஒற்றுமையையும் ஆறு இணைந்த கைகள் குறிப்பதாகச் சொல்கிறார் கமல்.
அண்ணா காலத்து திமுக முன்வைத்த திராவிட நாட்டைப் புதிய வார்த்தையில் சொல்கிறார் என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அண்ணா காலத்து "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" முழக்கத்துக்கு புதிய முலாம் பூசுகிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசை நோக்கி வலுவான உரிமைக்குரல் எழுப்ப ஆறு மாநிலங்களின் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறார் என்றும் சொல்லலாம். காவிரி நீர், முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுத்துவரும் நிலையில், கமலஹாசன் முன்வைக்கும் ஆறு மாநில ஒற்றுமை முழக்கம் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கமலஹாசனின் கட்சிப் பெயர் எடுபடுமா?
மக்கள் நீதி மய்யம் என்ற பலரும் யோசித்திராத பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமலஹாசன். இதில் மய்யம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஒருகாலத்தில் கமல் நடத்திய பத்திரிகையின் பெயர், மய்யம். திராவிடம், கழகம், பொதுவுடைமை என்பன போன்ற ஏதேனும் ஒரு பதம் இருக்கும் என்றுதான் பலரும் கணித்தனர். ஆனால் அவரோ களத்தில் இருக்கும் கட்சிகள் பயன்படுத்திய சொல்லாடல்களத் தவிர்த்து விட்டு, மக்கள் நீதி மய்யம் என்று வைத்திருக்கிறார்.

கட்சியின் பெயரோ, கட்சிப் பெயரின் சுருங்கிய வடிவமோ அல்லது ஆங்கிலச் சுருக்கமோ மக்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் வகையில் பெயர் வைப்பதுதான் பொதுவான வழக்கம். திமுகவும் அப்படித்தான், அதிமுகவும் அப்படித்தான், பாஜகவும் அப்படித்தான், புதிய தமிழகமும் அப்படித்தான். ஆனால் உச்சரிக்கச் சுலபமான மூன்று வார்த்தைகளைக் கொண்டதாகக் கட்சிப் பெயர் இருந்தாலும், மூன்றையும் சேர்த்து உச்சரிப்பதில் சற்று சிரமம் தெரிகிறது. கட்சிப் பெயரின் சுருங்கிய வடிவமும் கவரக்கூடியதாக அமையவில்லை.
ஆனாலும் கமலஹாசன் என்ற பெயரும் அவருடைய பிராபல்யமும் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டுசென்றுவிடும் என்றே தோன்றுகிறது.
ஏனென்றால், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பெயரும் அப்படித்தான் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் அந்தப் பெயர் எடுபட்டு விட்டது. அதற்குக் காரணம், கட்சியின் பெயரில் திராவிடமும் கழகமும் இருந்தது. கமல் கட்சியின் பெயரில் இரண்டும் இல்லை.
கட்சியின் கொள்கை என்ன?

பட மூலாதாரம், Twitter
ஆரம்பகாலம் முதல் தன்னை ஒரு கொள்கையாளராக அடையாளப்படுத்தியவர், திராவிடம் பற்றி நிறைய பேசியவர், தனது சித்தாந்தத்தைத் திரைப்படத்திலும் வெளிப்படுத்த விரும்பியவர் என்ற அடிப்படையில் கமலஹாசனின் கட்சிக்கொள்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
விந்திய மலைக்கு இந்தப் பக்கம் இருக்கும் தென்னிந்தியா சுயமரியாதை இந்தியா என்று பேசி பெரியாரிஸ்டுகளை உற்சாகப்படுத்தினார். திராவிடம் என்றும் நிலைத்து நிற்கும் என்று சொல்லி திமுகவுக்குத் தெம்பூட்டினார். கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசியதைக் கம்யூனிஸ்டுகள் கொண்டாடித் தீர்த்தனர். திடீரென கருப்புக்குள் காவியும் அடக்கம் என்று சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சிவைத்தியம் கொடுத்தார். ஆகவே, அவருடைய கொள்கை எப்படியாக இருக்கும் என்று யாராலும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கட்சி தொடங்கும் நாளன்று கொள்கைகள் முக்கியமல்ல, செயல்திட்டம்தான் முக்கியம் என்று பேசினார். அதுவே ஒரு விவாதப்பொருளாக மாறிய நிலையில், கட்சி தொடங்கும் விழாவில் பேசிய கமல், தன்னுடைய கட்சியின் கொள்கைகள் என்று சில அம்சங்களைப் பட்டியலிட்டார்.
என்ன செய்ய போகிறார் கமல்?
ஊழல்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதால் அதை ஒழிப்பதற்கே முன்னுரிமை என்று பேசினார். ஊழல் ஒழிப்பு முழக்கம் என்பது ஜெயப்ரகாஷ் நாராயணன் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகின்ற விஷயம்தான் என்பதால் கமலின் இந்த முழக்கத்துக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்கும் என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நல்ல தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கப் பாடுபடுவேன் என்றார். சாதிமதம் அறவே நீக்கப்படும் என்றார். ஊழலை ஒழித்தால் மின்சாரம் வருமென்றார். இலவசம் கிடையாது என்றார். மக்களுக்கு ஸ்கூட்டர் தரமாட்டேன், மாறாக, மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்றார். இன்னும் இன்னும் பல விஷயங்களைச் சொன்னார். இவை எல்லாமே பொதுவான அம்சங்கள்தான்.
இந்தக் கொள்கைகளைச் சொல்லாத ஒரு கட்சி தமிழகத்திலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை. ஆனாலும் கமல் முன்வைத்த அம்சங்கள் நல்ல அம்சங்கள். இங்கே கேள்வி என்னவென்றால், கொள்கை என்று சொல்லிவிட்டு, செயல்திட்டங்களைத்தான் சொன்னார். கொள்கை பற்றிப் பேசும்போது, என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம் என்று சொல்லியிருக்கிறார். அதென்ன, மையத்தில் என்பதற்கு கமலஹாசன்தான் நிறுத்தி, நிதானமாக எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கவேண்டும்.

கூடவே, கமலஹாசன் சொன்ன மற்றொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். கொள்கை என்ன, கொள்கை என்ன என்று திரும்பத் திரும்பக் கேட்பவர்களுக்குப் புத்தகம் போட்டுப் பதிலளிக்கமுடியும், அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார் கமலஹாசன்.
ஆக, கமலஹாசன் கட்சியின் கொள்கைகள் பற்றிப் பேசவும் விமரிசிக்கவும் புத்தகம் வெளியாகும்வரை காத்திருப்போம்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான நீதிக்கட்சியின் கொள்கைகளில் இருந்து தன்னுடைய கட்சிக்கான கொள்கைகளை வடிவமைகப்படுவதாகச் சொன்னார் கமலஹாசன்.
அதுமட்டுமின்றி, "நான் உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன்" என்றும் மக்களிடம் சொன்னார். திமுகவின் தேர்தல் அறிக்கையில், "திமுக: உங்கள் வீட்டுக்கு விளக்கு, நாட்டுக்குத் தொண்டன்" என்று குறிப்பிட்டிருப்பார் அண்ணா. அதைத்தான் கமலஹாசன் பயன்படுத்தியிருக்கிறார்.
அதேபோல, கமலஹாசன் கடந்த சில மாதங்களாகப் பேசிவருகின்ற பல அம்சங்கள் திராவிட இயக்கத்தினர் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் அமல்படுத்தியும் வருபவைதாம். ஆகவே, அவர் வடிவமைக்கப்போகும் அல்லது வடிவமைத்துக்கொண்டிருக்கும் கொள்கைத் திட்டத்தில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளே பிரதானமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. கொஞ்சம் பொறுப்போம். புத்தகம் வரட்டும்!
(கட்டுரையாளர், ஆர்.முத்துக்குமார். எழுத்தாளர். "திராவிட இயக்க வரலாறு", "தமிழக அரசியல் வரலாறு", "இந்துத்வ இயக்க வரலாறு" முதலான நூல்களின் ஆசிரியர். )
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












