“என் மூச்சுள்ள வரையில் தாக்குப்பிடிப்பேன்”: கேள்விகளுக்கு கமல் ஹாசன் பதில்

இன்று (புதன்கிழமை) மாலையில் நடைபெற்ற மதுரை பொதுக்கூட்ட மேடையில் கமலிடம் மக்கள் கேட்ட சில கேள்விகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

கமல்

சில கேள்விகள் மேடையில் படித்து காண்பிக்கப்பட்டது. அதற்கு கமல் அங்கிருந்தே பதிலளித்தார்.. அவற்றில் சில பின்வருமாறு:-

கேள்வி: இவ்வளவு நாள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன்.

கே: உங்களை பிடிக்கும்; உங்கள் சினிமா, கவிதை, கருத்துக்கள் ஏன் அரசியல் இயக்கம்கூட பிடிக்கிறது . ஆனால் நம்பி வரலாமா? எவ்வளவு நாட்கள் தாக்கு பிடிப்பீர்கள்?

: என் மூச்சுள்ள வரையில் நான் தாக்குப்பிடிப்பேன். அதன் பின்னர் இவர்கள் (நிர்வாகிகள்) தாக்குப் பிடிப்பார்கள். கடைசிவரை போராட இங்கு ஆள் இருக்கும்

கே: உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா?

: நான் விஸ்வரூபம் இரண்டாம் பாகமே எடுத்துவிட்டேன். இப்போது மக்களின் .கஷ்டத்தை பார்த்துதான் விஸ்வரூபம் எடுக்கவுள்ளேன்.

கமல்

கே: உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா? அம்பேத்கரா? பெரியரா? காமராஜரா?

: என்னை பகுத்தறிவுவாதி என்று கிண்டல் செய்வார்கள் . ஆனால், நீங்கள் எத்தனை சாமிகளை வணங்குகிறீர்கள்! அதே போலத்தான் நானும். எனக்கு காந்தியையும் பிடிக்கும், பெரியாரை, காமராஜரையும் பிடிக்கும். அம்பேத்கரையும் பிடிக்கும்

ஏன், எனக்கு சந்திரபாபுவையும் பிடிக்கும், பினராயி விஜயனையும் பிடிக்கும், ஒபாமாவையும் பிடிக்கும்.

கே: ஊழலை ஒழிப்போம் என்று எல்லோரும் சொல்லி விட்டார்கள் , நீங்கள் எப்படி ஒழிப்பீர்கள்?

: நான் மட்டும் எப்படி தனியாக ஊழலை ஒழிப்பது?. அனைவரும் சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும். அதற்கு அனைவரும் சில தியாகங்கள் செய்ய வேண்டும்

கே: உங்களுக்கு வாக்களித்து ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், நீங்கள் எப்படி மற்றவர்களைபோல குவாட்டரும்,ஸ்கூட்டரும் தருவீர்களா?

கமல்

: நான் முன்பே சொல்லிவிட்டேன் குவாட்டரும்,ஸ்கூட்டரும் கொடுத்து கொண்டிருக்க முடியாது. நீங்களே சுயமாக ஸ்கூட்டர் வாங்கும் நிலையை எட்ட வேண்டும்.

கே: தமிழ்நாட்டில் தமிழ் செத்து கொண்டிருக்கிறது. அதை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்?

: சந்தோசமாக தமிழ் பேசுங்கள் , உங்கள் பேச்சு வழக்கில் தமிழ் இருந்தால் அந்த மொழி வாழும். அப்படி இல்லாவிட்டால் தமிழ் மெல்ல சாகாது உடனடியாக சாகும். ஆரம்ப கல்வி முதல் தமிழ் இடம்பெற வேண்டும்.

கே: எதற்கு ராமேஸ்வரம் ? எதற்கு கலாம் வீடு?

: கேள்வி வரிசை மாறிவிட்டது. கலாமின் வீடு ராமேஸ்வரத்தில் இருந்தது. அதனால் அந்த ஊருக்கு செல்லும்போது அவர் வீட்டுக்கும் நான் சென்றேன்

கே: உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா?

: (மக்களை சுட்டிக்காட்டியபடி) இதோ, என் பிள்ளைகள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். (மேடையில் உள்ள பெண்களை சுட்டிக்காட்டி) இவர்கள் வந்துள்ளார்கள். மற்றவர்களும் இனி வருவார்கள் என்று நம்பலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :