பத்மாவத் படத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் மிரட்டல் விடுத்தவர்

பட மூலாதாரம், Getty Images
ஓய்வுப் பெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ராஜ் ஷெகாவாத் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அகமதாபாத்தில் நடத்தி வருகிறார்.
ராஜ் ஷெகாவத்தான் குஜராத் அரசாங்கத்தின் , `வைப்ரண்ட் குஜராத்` போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியார் பாதுகாப்பு கொடுத்து வந்தார். ஆனால், இப்போது அவர் அறியப்படுவது அந்தக் காரணத்துக்காக அல்ல.
ஆம். இன்று அவர் வேறு ஒரு காரணத்துக்காக கவனம் பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களாக சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களை கர்னி சேனா முன்னெடுத்து வருகிறது அல்லவா? அந்த அமைப்பின் தலைவர்தான் ராஜ் ஷெகாவத்.
முரண்கள்
பத்மாவத் திரைப்படத்தை பார்க்க சென்றால் மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும் என்றும் திரையிடும் திரையரங்குகளை கொளுத்தப்போவதாகவும் ஷெகாவத் மிரட்டும் வீடியோக்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன. ஆனால், இதுநாள் வரை அவர் மீது எந்த வழக்குகளும் காவல் நிலையத்தில் பதியப்படவில்லை.
இதில் விந்தை என்றால், இவர் தலைமை வகிக்கும் கர்னி சேனா அமைப்பு, பத்மாவத் திரைப்படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனின் மூக்கை அறுத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துக் கொண்டு இருந்த சமயத்தில், தீபிகாவின் அகமதாபாத் பயணத்தின்போது அவருக்குப் பாதுகாப்பு கொடுத்தது ஷெகாவத்தின் பாதுகாப்பு நிறுவனம் தான்.
யார் இந்த ராஜ் ஷெகாவத்?
எந்தக் கூட்டத்தில் ராஜ் ஷெகாவத் நின்றாலும், அவரை சுலபமாக கண்டுப்பிடித்துவிடலாம். ஆம், விரல்கள் அனைத்திலும் தங்க மோதிரங்களையும், உடல் முழுவதும் தங்க நகைகளையும் அணிந்திருக்கும் அவர் எப்படி நம் கண்ணிலிருந்து தப்புவார்?

பட மூலாதாரம், Getty Images
அகமதாபாத் காவல் துறை ஆணையர் ஏ.கே.சிங்குடன் உள்ள புகைப்படத்தை, ஷெகாவத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து இருக்கிறார். எப்போதும் ஐந்து மெய்காவலர்களுடன் வலம் வருகிறவர் அவர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அவரது நிறுவனம், அரசாங்கத்தின் குறிப்பாக சுற்றுலா மற்றும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தங்களைப் பெற்று இருக்கிறது.
அகமதாபாத்தில் அவருக்கு சொந்தமான ஒரு உணவகமும், உடற்பயிற்சி கூடமும் உள்ளது.
இந்த பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு, அவர் எல்லை பாதுகாப்பு படையில், காஷ்மீர் பிரதேசத்தில் பணியில் இருந்ததாக அவர் கூறுகிறார்.
ஆனால், பத்மாவத் திரைப்படம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியப் பின், அவர் அந்த படம் குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் தென்பட்டார். அந்த விவாதங்களில் ஷெகாவத், `பத்மாவத்` திரைப்படத்தை திரையிடும் திரையரங்கங்கள் மற்றும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்தார்.
`நான் வன்முறையை ஆதரிக்கவில்லை`
ஒரு பக்கம் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் தொலைக்காட்சிகளில் திரையரங்கங்களை எரித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் பேசிய போது, " `தர்மா` மற்றும் `கர்மா` ஒன்றோடு ஒன்று கலக்கக் கூடாது. ஒரு செயற்பாட்டாளானாக என்னுடைய செயல்கள் வேறு, என்னுடைய தொழில் என்பது வேறு. என் மதத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பதற்காக நான் கர்னி சேனா அமைப்பில் இருக்கிறேன்."
மேலும் அவர், "நான் என் நிறுவனத்தில் பணிப்புரிபவர்களிடம் திரையரங்கங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்க சொல்லி இருக்கிறேன். ஒரு வேளை பெரும் வன்முறை வெடித்தால், காவல் துறைக்கு தகவல் சொல்ல சொல்லி இருக்கிறேன்."
கடைகள், அரசாங்க சொத்துக்கள் தாக்கப்படுவது, தீயிட்டு கொளுத்தப்படுவது குறித்து அவரிடம் கேட்ட போது, "யார் அவர்கள் என்பது எனக்கு தெரியாது. நாங்கள் அந்தப் படத்தை எதிர்க்கிறோம். நாங்கள் திரையரங்களுக்குச் சென்று, அந்த படத்தை பார்க்க வரும் மக்களிடம், பூங்கொத்து கொடுத்து, இந்தப் படத்திற்கு செல்லாதீர்கள் என்று சொல்லுவோம்." என்கிறார்.
அரசியல் தொடர்பை மறுக்கும் அவர், தாம் தன் தொழிலில் மிக நேர்த்தியாக இருப்பதால்தான் மக்களுடனும், அரசாங்கத்துடனும் நல்ல தொடர்பில் இருப்பதாக கூறுகிறார்.
குஜராத்தின் மிக மூத்த அதிகாரி தன்னை தொடர்பு கொண்டு கர்னி சேனா அமைப்பின் கோபத்தை தணிக்க உதவி கேட்டதாகவும் ஷெகாவத் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












