இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண்

ஹெப்பர்ஸ் கிட்சன்
படக்குறிப்பு, அர்ச்சனா ஹெப்பர்
    • எழுதியவர், ஷரத் பெஹரா
    • பதவி, பிபிசி தெலுங்கு

ஹெப்பர்ஸ் கிட்சன். இந்திய சைவ உணவுகளை எவ்வாறு எளிமையாக செய்வது என்ற செய்முறையை கற்றுத்தரும் இந்த தளம், இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிகவும் பிரபலமானது.

சுமார் 64 லட்சம் மக்கள் ஹெப்பர்ஸ் கிட்சனின் ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், யூ டியூப் மற்றும் பின்ட்ரஸ்ட் போன்ற பல்வேறு தளங்களில் ஹெப்பர்ஸ் கிட்சன் பதிவேற்றும் சமையல் காணொளிகளை லட்சக் கணக்கான மக்கள் தினமும் பார்வையிடுகிறார்கள்.

பலர் இந்த ஹெப்பர்ஸ் கிட்சனின் சமையல் காணொளிகளை கண்டாலும், இதற்கு பின்னால் உள்ளது யார் என எவருக்கும் தெரியாது. அவரின் கைகளை மட்டுமே எல்லா காணொளிகளிலும் காண முடியும்.

சமையல்

பட மூலாதாரம், HebbarsKitchen/facebook

அவர் அடையாளத்தை இதுவரை அந்த நபர் வெளிப்படுத்தியது இல்லை.

பொழுது போக்கிற்காக தொடங்கப்பட்ட ஹெப்பர்ஸ் கிட்சன் இந்த அளவிற்கு உயரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார் பிபிசியிடம் பேசிய இதன் நிறுவனர் அர்ச்சனா ஹெப்பர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த அர்ச்சனா, தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் வசித்து வருகிறார்.

இந்தியாவில் இருக்கும் சமையல் பக்கங்களில் இவரது ஹெப்பர்ஸ் கிட்சனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வுபடி, 2017ஆம் ஆண்டில் உணவு பிரிவில் ஹெப்பர்ஸ் கிட்சனின் காணொளிகள்தான் அதிகம் பார்வையிடப்பட்டுள்ளன.

ஹெப்பர்ஸ் கிட்சன்

பட மூலாதாரம், Archana

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும், சுமார் 9 கோடி பார்வையாளர்களை ஹெப்பர்ஸ் கிட்சன் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள காணொளிகள் பெற்றுள்ளன.

2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் தன் சமையல் பணியை தொடங்கினார் அர்ச்சனா.

ஹெப்பர்ஸ் கிட்சனின் ஆரம்பகால பயணம் குறித்து விவரித்த அர்ச்சனா, "திருமணத்திற்கு பின், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வந்தேன். நான் செய்து வந்த மென்பொருள் சோதனை பணியை இங்கு தொடர விரும்பினேன். ஆனால் இங்கு வேலை கிடைப்பது என்பது கடினமாக இருந்தது. அப்போது என் நேரத்தை கழிக்க, Wordpress இணையதளத்தில் கணக்கு தொடங்கி, அதில் சில எளிமையான சமையல் குறிப்புகளை செய்முறை மற்றும் புகைப்படங்களுடன் பதிவிட தொடங்கினேன். ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இல்லை. பல வெளிநாட்டு சமையல் குறிப்பு பக்கங்களை பார்த்து நம் இந்தியாவில் அதுபோல எதுவும் இல்லையே என்று தோன்றியது. என் சமையல்களை சிறிய வீடியோ பதிவாக ஆக்கி அதனை வெளியிட அதற்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைத்தது" என்றார்.

ஹெப்பர்ஸ் கிட்சன்

ஆரம்ப காலத்தில் இது மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்ட அர்ச்சனா, "நானே வீடியோ எடுத்து நானே அதனை எடிட் செய்வேன். என் கணவர் இணையதளம், மொபைல், ஆப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை பார்த்துக் கொள்வார். ஆரம்பத்தில் ஐ- ஃபோனில் வீடியோ எடுத்து மடிக்கணிணியில் எடிட் செய்து வந்தேன். பின்பு, DSLR கேமரா, எடிட் செய்வதற்கான சிறந்த மென்பொருள் மற்றும் உயர்நிலை கணிணியை என் கணவர் பரிசலிக்க, மேலும் கடினமாக உழைக்க என்னை இது தூண்டியது" என தெரிவித்தார்.

தான் செய்யும் வீடியோக்களை பதிவுடும் முன் தன் கணவரிடம் காண்பித்து கருத்து கேட்பதாக தெரிவித்த அவர், இந்தியாவின் அதிக பார்வையிட்ட ஃபேஸ்புக் சேனல்களில் முதல் ஆறு இடங்களில் ஒன்றாக ஹெப்பர்ஸ் கிட்சன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

ஹெப்பர்ஸ் கிட்சனின் பெரும்பாலான வீடியோக்கள் 2 நிமிடத்திற்கும் குறைவானவை. அர்ச்சனாவின் கைகள், சில பாத்திரங்களை தவிர அந்த வீடியோக்களில் எதுவும் காண முடியாது.

ஹெப்பர்ஸ் கிட்சன்

பட மூலாதாரம், hebbarskitchen

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநில மக்கள்களுக்கு ஏற்றாற்போல பல உணவு வகைகளின் செய்முறைகளை இந்த இணையதளத்தில் காணலாம்.

தனது அடையாளத்தை எந்தத் தளத்திலும் வெளிப்படுத்தாத அர்ச்சனா, தான் சொந்த விஷயங்களை வெளியிட விரும்பாதவர் என்று கூறினார்.

ஒரு நாளைக்கு ஒரு வீடியோவையாவது பதிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

வீட்டில் இருக்கும் பெம்பாலான பெண்கள், ஆர்ச்சனாவின் சமையல் குறிப்பு வீடியோக்கள் தங்களை ஊக்குவிப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், தாங்களும் அது போன்ற ஒரு சமையலறையை உருவாக்கி வலைப்பதிவுகளில் பதிவேற்ற முயற்சிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஹெப்பர்ஸ் கிட்சன்

எளிமையான முறையில் சமையல் குறிப்புகளை, வீடியோவாக பதிவு செய்து மக்களை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் எனக் கூறுகிறார் அர்ச்சனா. முக்கியமாக உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சைவ சமையல் குறிப்புகளில் அவர் கவனம் செலுத்துகிறார்.

line

உந்து சக்திகள்: என் கணவருக்கு உணவு என்றால் மிகவும் பிடிக்கும். சமையலில் இவ்வளவு ஆர்வம் காட்ட அதுதான் காரணம்.

சமைக்க செலவிடும் நேரம்: இட்லி, தோசை, ரசம், சாம்பார், புலாவ் போன்ற உணவுகள் எல்லாம் விரைவில் சமைத்து விட முடியும். கேக், இனிப்பு வகைகள் எல்லாம் சிறப்பாக வர இரண்டில் இருந்து மூன்று முறை அதனை சமைக்க வேண்டும்.

முதல் வீடியோ சமையல் குறிப்பு: மென்தே தம்ப்லி(வெந்தய ரைத்தா) என்ற உடுப்பியின் பாரம்பரிய உணவு வகை.

பன்னீர் உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை

அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோ: ரசகுலா செய்முறை வீடியோவை 17 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.

சமைத்த உணவை என்ன செய்வீர்கள்?: பலகாரங்கள், காலை உணவுகளை எல்லாம் நாங்கள் வீட்டில் சாப்பிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்வோம். இனிப்பு வகைகள் செய்யும்போது, கணவர் தன் அலுவலகத்திற்கு எடுத்து சென்று விநியோகிப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :