அமெரிக்கா: தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக டிரம்பிடம் விரைவில் விசாரணை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தாம் நேரில் விசாரிக்கப்படுவதை எதிர்நோக்கி இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர், தமது வழக்கறிஞர்களின் ஒப்புதலுடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று வார காலத்தில் விசாரிக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
புதனன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் விசாரணை செய்யப்பட முழுமையாகத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
"எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதை முடிக்க நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக தாம் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், இது தமக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
ரஷ்யா மறுத்துள்ளபோதிலும், அதிபர் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்த ரஷ்யா முயற்சி செய்தது என்று அமெரிக்க விசாரணை அமைப்புகள் ஏற்கனவே முடிவு செய்துள்ளன.

பட மூலாதாரம், Reuters
விசாரணை எவ்வாறு நடக்கும்?
அந்த விசாரணை எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது குறித்து டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே மியுலரிடம் ஆலோசித்து வருகின்றனர்.
நேருக்கு நேர் நடைபெறும் இந்த விசாரணை உரையாடலாகவோ, எழுத்துபூர்வமாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ இருக்கும்.
மியுலர் நேர்மையாக விசாரிப்பாரா என்ற கேள்விக்கு, "அப்படித்தான் நான் நம்புகிறேன். விசாரணை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியத்தான் போகிறது," என்று கூறினார் டிரம்ப்.
தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தனது மின்னஞ்சல்கள் கசிந்தது தொடர்பாக எஃப்.பி.ஐ விசாரிக்க தம்மைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அப்போது டிரம்ப் விமர்சித்தார்.
இதுவரை என்ன நடந்துள்ளது?
அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞரான ஜெஃப் செஷன்ஸ், கடந்த வாரம், மியுலரால் பல மணி நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.

பட மூலாதாரம், EPA
இவ்விவகாரத்தில் விசாரணை செய்யப்பட்ட டிரம்ப் அரசின் மூத்த நிர்வாகிகளில் முதல் நபராக ஜெஃப் செஷன்ஸ் கருதப்படுகிறார்.
அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின், டிரம்ப் பின் பிரசாரக் குழுவின் முன்னாள் மேலாளர் பால் மனஃபோர்ட், மனஃபோர்ட்டின் தொழில் கூட்டாளி ரிக் கேட்ஸ் மற்றும் டிரம்ப்பின் இன்னொரு பிரசார ஆலோசகரான ஜார்ஜ் பாபடோபோலஸ் ஆகியோர் மியுலரால் ஏற்கனவே குற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மைக்கேல் ஃப்ளின் மற்றும் ஜார்ஜ் பாபடோபோலஸ் ஆகிய இருவரும் எஃப்.பி.ஐ-இடம் பொய்யான தகவல் அளித்ததை ஏற்கனவே மியுலரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













