நாளிதழ்களில் இன்று: ஆதார் ரகசியங்களை பாதுகாக்க வருகிறது புதிய 16 இலக்க எண்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆதார் எண்களின் ரகசியம் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனும் செய்தி வெளியாகிவரும் நிலையில், ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் மெய்நிகர் பாதுகாப்பு அம்சம் ஒன்றை யுஐடிஏஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி, ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், ஆதார் பயன்பாட்டாளர்கள் ஒரு 16 இலக்க தற்காலிக, எண்ணை ஆதார் இணையதளம், சேவை மையங்கள் அல்லது செல்பேசி செயலி ஆகியவற்றின்மூலம் உருவாக்கி, ஆதார் எண்களுக்கு பதிலாக அவற்றை ஆதார் எண் கோரும் நிறுவனங்களிடம் வழங்க முடியும்.

தினத்தந்தி
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, பொங்கலை ஒட்டி ஜனவரி 12, 17, 18 ஆகிய தேதிகளில்திரையரங்குகளில் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்று தினத்தந்தியின் செய்தி தெரிவிக்கிறது.
இடையில் உள்ள பிற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் அந்நாட்களில் திரை அரங்குகள் 5 காட்சிகள் திரையிட முடியும்.

தினமணி
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியால் உண்டான குழப்பங்களாலேயே இந்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% எனும் அளவுக்கு குறைந்துள்ளதாக தினமணி நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பல பொருளாதார புள்ளிவிவரங்களை குறிப்பிட்டுள்ள அந்த தலையங்கத்தில் திறன் சார்ந்த வேலை வாய்ப்பு மற்றும் ஊரகப் பொருளாதாரம் ஆகியவற்றை முடுக்கிவிட விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை வழிகோல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2015-இல் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு சரிவர விசாரணை செய்யவில்லை என்பதை அறிந்தபின் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிற செய்திகள்:












