''2018ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக இருக்கும்: உலக வங்கி

பட மூலாதாரம், PUNIT PARANJPE
உலக வங்கி வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் குறித்த அறிக்கையில், வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதே ஆண்டில் உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 3.1%-ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2018-ஆம் ஆண்டில் வளர்ந்த நாடுகள் 2.2% பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும், வளரும் நாடுகள் 4.5% பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. சீனாவின் வளர்ச்சி விகிதம் 2017-இல் 6.8%இல் இருந்து, 2018-இல் 6.4%ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியா குறித்து கூறப்பட்டுள்ள 6 முக்கிய விடயங்கள் இதோ.
- வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியா 6.7% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை.
- 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5%ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
- தெற்காசியப் பிராந்தியத்தில் 2017-ஆம் ஆண்டு 6.5% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் உலக வங்கி, அந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஜூன் மாதத்துக்கு முன்பு கணிக்கப்பட்ட அளவைவிடவும் குறைவு என்று கூறியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இடையூறுகளே தெற்காசியாவின் வளர்ச்சி குறையக் காரணம் என்று கூறுகிறது அந்த அறிக்கை.
- தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதற்கும் ஜி.எஸ்.டி வரியால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு காரணம் என்று உலக வங்கி கூறியுள்ளது.
- சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளில், இந்திய அரசு மறுமுதலீடு செய்துள்ளது வங்கித் துறையின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து, தனியார் துறைக்கு கடனுதவி வழங்குவதன்மூலம், இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
- பணமதிப்பு நீக்கம் தற்காலிக இடையூறுகளை ஏற்படுத்தினாலும், 'மேக் இன் இந்தியா', பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்றும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








