ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
வெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா

பட மூலாதாரம், Getty Images
வெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவனிப்பின்மைக்கும் ஆளாகக்கூடும் எனும் கவலைகள் நிலவி வரும் சூழ்நிலையில், வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக் குழந்தைகளை தத்தெடுக்க எத்தியோப்பியா தடை விதித்துள்ளது.
அமெரிக்கர்களால் தத்தெடுக்கப்படும் வெளிநாட்டுக் குழந்தைகளில் 20% பேர் எத்தியோப்பியக் குழந்தைகள் ஆவர்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா?

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் தங்கள் நாடு மீண்டும் சேரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அந்த ஒப்பந்தம் தங்களுக்கு மோசமானது என்று கூறி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா அதிலிருந்து விலகியது. பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத உலகின் ஒரே நாடாக தற்போது அமெரிக்காதான் உள்ளது.

கொலம்பியா: கிளர்ச்சியாளர்களுடன் பேசுவார்த்தை ரத்து

பட மூலாதாரம், AFP
எண்ணெய் குழாய் மற்றும் கடற்படைத் தளம் ஆகியவற்றின் மீது நடத்தபட்ட தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய விடுதலை ராணுவம் எனும் கிளிர்ச்சியாளர்கள் அமைப்புடன் நடத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய அதிபர் ஜுவான் மேனுவல் சாண்டோஸ் கூறியுள்ளார்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் நிலச் சீர்திருத்தம் மற்றும் வளங்களை பரவலாக்கக் கோரி அந்த கிளர்ச்சி அமைப்பு 1964 முதல் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் கலவரம்: இருவர் பலி

பாகிஸ்தானில், ஜைனப் எனும் ஏழு வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கசூர் நகரில் நடந்துவரும் கலவரங்களில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
காணாமல் போன பல நாட்களுக்குப் பிறகு, கடந்த செவ்வாயன்று, ஜைனபின் உடல் ஒரு குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பின் அங்கு வெடித்த போராட்டம் கலவரமாக மாறியது.

இரான்: மரண தண்டனை குறைய வாய்ப்பு

பட மூலாதாரம், AFP
போதைப் பொருளுக்கு எதிரான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, போதை பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக இரானில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு, அத்தண்டனை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
போதை பொருள் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்பட்ட அனைத்து மரண தண்டனைகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்நாட்டு நீதித்துறையின் தலைவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












