உ.பி., ரயில் விபத்து; 21 பேர் பலி, 85 பேர் காயம்

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பிபிசியிடம் பேசிய முஸாஃபர்நகர் மாவட்ட நீதிபதி ஜி.எஸ் பிரியதர்ஷி, ''என்னை பொறுத்தவரை இந்த விபத்தில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 80 லிருந்து 85 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.'' என்று கூறினார்.

ரயிலில் பயணித்த பிற பயணிகள் சுமார் 2000 பேர் பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டு வருவதாகவும் நீதிபதி ஜி.எஸ் பிரியதர்ஷி மேலும் தெரிவித்தார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை சுமார் 5.50 மணியளவில் கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமூக ஊடகமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பூரியிலிருந்து ஹரித்துவாரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, கத்தோலி என்ற இடத்தில் ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.

ரயில் பெட்டிகள் தடம்புரண்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 3.5 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கடுமையான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :