70 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்ட சத்தீஸ்கர் ஜோடி

சத்தீஸ்கரில் "பஹாடி கோர்வா" எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர்கள் இருவர், திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.

75 வயது ரதியா ராம் என்ற மணமகனும் 70 வயது ஜீவ்னி படி என்ற மணமகளும் தங்கள் சமூகத்தினரிடம் அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டனர்.

தனியாக இருக்கும் எந்தவொரு ஆண்மகனும், தனியாக இருக்கும் பெண்ணுக்கு வளையல் போட்டு, `லிவ் இன் ரிலேஷனில்` வாழலாம் என்பது இந்த சமூகத்தினரின் நடைமுறை வழக்கம்.

எனவே, வாழ்க்கையின் அந்திம காலத்தில் முதியவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

சத்தீஸ்கரின் ஜஷ்புர், கோர்வா, பிலாஸ்புர், சர்குஜா, சூரஜ்புர் மற்றும் ராய்கட் மாவட்டங்களைத் தவிர சில தொலைதூர மலைப் பகுதிகளில் கோர்வா சமூகத்தினர் வசிக்கின்றனர்.

இந்த சமூகத்தின் மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 37 ஆயிரம் மட்டுமே .

காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும், வேட்டையாடியும் வாழ்க்கையை கழித்து வரும் இந்த இனத்தினர், முதிர் பருவ காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

புதுமண தம்பதிகளுக்கு உற்றார் உறவினர் என பலர் இருந்தாலும், இவர்களை கவனித்துக் கொள்வதற்கு யாரும் இல்லை.

''ஓய்வூதியமே போதும்''

"15 நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போதே இருவரும் ஒன்றாக வசிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம்" என்று மணமகன் ரதியா ராம் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிறகு ரதியா ராம், ஜீவ்னியை அழைத்துக்கொண்டு பக்டோல் கிராமத்திற்கு வந்துவிட்டார். இதை அறிந்த கிராமத் தலைவர் லலித் நாகேஷ், கோர்வா இனத்தவர்களின் பஞ்சாயத்து கூட்டினார். ஆகஸ்டு 16-ஆம் தேதியன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.

"அவர் என்னுடன் வாழத் தயாராக இருக்குபோது எனக்கு என்ன பிரச்சனை? " என்று கேள்வி கேட்கிறார் ஜீவ்னி படி. "எனக்கு என்று ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது, கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்வோம்" என்கிறார் அவர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உற்றார்-உறவினர், பேரக்குழந்தைகள் என அனைவரும் நடனமாடி கொண்டாடினார்கள். திருமணம் செய்து வைக்க தங்கள் சமூகத்தினர் எடுத்த முடிவு சரியானது என்று சொல்கிறார் ரதியா ராமின் பேரன் தஹியா ராம்.

''என் மனைவி இறந்தபிறகு, மற்றொரு கைம்பெண்ணுடன் வாழ்ந்துவருகிறேன். நானும் எனது சமூகத்தினரின் அனுமதி பெற்று திருமணம் செய்துக் கொள்வேன்" என்கிறார் அவர்.

மிகவும் பின் தங்கிய இந்த பழங்குடியின சமூகத்தில் இப்படியொரு திருமணம் நடைபெறுவது இந்திய சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய முக்கியமான சம்பவம் என்று பஹீச்சா பகுதியை சேர்ந்த சமூக சேவகர் ஹலீம் ஃபிர்தெளஸி கூறுகிறார்.

பாரதிய ஜனதா இளைஞர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பிரதாப் சிங் ஜூதேவ் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

"மிகவும் பின் தங்கிய சிறப்பு பழங்குடியின பட்டியலில் கோர்வா பழங்குடியினர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை மைய நீரோட்டத்தில் இணைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன'' என்று பிரதாப் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னுதாரணம்

திருமணத்துக்கான வயது வரம்பை பழங்குடியின சமூகத்தில் அறிமுகப்படுத்திய முன்மாதிரி சம்பவம் இது.

''நவீன சமூகத்திலும் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இருப்பதால், வயதானவர்களில் பலர் முதியோர் இல்லத்தில் இருக்கின்றனர், அல்லது வீட்டின் ஒரு மூலையில் மரணத்தை எதிர்பார்த்து முடங்கி கிடக்கின்றனர்.

ஆனால், மீதமிருக்கும் காலத்தை முழு உற்சாகத்துடன் வாழ திருமணம் ஒரு வழியாக இருக்கிறது என்பதை இங்கு பார்க்கிறோம்'' என்று ஜூதேவ் சொல்கிறார்.

"இருவரின் ரேஷன் அட்டைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்'' என்று பஞ்சாயத்து தலைவர் லலித் நாகேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜீவ்னிக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை கொடுப்பதுடன், அவர்களின் ஆரோக்கியத்திற்கு பஞ்சாயத்து பொறுப்பேற்கும்.

"இவை நமது சமுதாயத்தின் பாரம்பரியம் ஆகும். எங்கள் பழங்குடி சமூகத்தை, இனிமேல் ஒரு மேம்பட்ட சமூகம் என்று அழைக்க முடியும்" என்று அவர் கூறினார்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :