You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக விவசாய பல்கலைக்கழக சேர்க்கையில் வெற்றிபெற்ற பழங்குடி பெண்
தமிழக விவசாய பல்கலைக்கழக சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பழங்குடி இன பெண் நான்காம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
2017ல் விவசாய பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பித்த 50,000 மாணவர்களில், மதிப்பெண் வரிசையில் தேர்தெடுக்கப்பட்டவர்களில், குருபர் இனத்தை சேர்ந்த சௌமியா தகுதி பரீட்சையில் 200/200 மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார்.
ஒரு தனியார் பள்ளியில் படித்த சௌமியா 12ம் வகுப்பு தேர்வில் 1187/2000 மதிப்பெண் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பில் 490/500 பெற்றிருந்தார்.
விவசாய பல்கலைக்கழக சேர்க்கையில் கிடைத்த வெற்றி தனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்கிறார் சௌமியா.
''எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேருதவியும் இதற்கு காரணம். கவனமாக படிப்பேன். சாதனைகளை தொடருவேன்,'' என்கிறார் சௌமியா.
பிபிசி தமிழிடம் பேசிய சௌமியாவின் தந்தை பாரதி, ''குரும்பன் இனத்தை சேர்ந்தவர்களில் பலர் தற்போதுதான் முதல் தலைமுறையாக பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் நுழைந்துள்ளனர். என் மகள் விடாமுயற்சியுடன் படித்து, கலந்தாய்வில் முழுமதிப்பெண் பெற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது,'' என்றார்.
குரும்பன் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் கூட்டமாக வாழந்துவந்ததாக கூறும் பாரதி, தற்போதும் மிகவும் பின் தங்கிய பொருளாதார நிலையில்தான் வாழ்ந்துவருகின்றனர் என்றார்.
சௌமியா மாநில அளவில் நான்காம் இடம் பெற்றுள்ள செய்தி பல பழங்குடி இன மாணவிகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்கிறார் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சேர்ந்த பெ.சண்முகம்.
''தர்மபுரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வசித்து வரும், குரும்பன் இன மக்கள் பெரும்பாலும் குரும்பாடு என்னும் ஒரு வகை ஆடுகளை மேய்ப்பவர்களாகவும், சிறு அல்லது குறு விவசாயிகளாக இருந்து வருகின்றனர். பலருக்கு உயர் கல்வி எட்டாக்கனியாக உள்ள சமயத்தில் சௌமியாவின் வெற்றி பலருக்கும் இனிப்பு செய்தி,'' என்றார் சண்முகம்.
தமிழக விவசாய பல்கலைக்கழக அதிகாரிகள் சௌமியாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்வும் முனைப்புடன் உள்ளதாக தெரிவித்தனர்.
''சமீப ஆண்டுகளில் எங்கள் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் முறையில் முதல் ஐந்து இடங்களில் தேர்வான பழங்குடி இனத்தை சார்ந்த பெண்கள் இருப்பதாக தெரியவில்லை. சௌமியாவுக்கு தேவையான ஊக்கத்தை அளிப்போம்,'' என விவசாயப் பல்கலைக் கழக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்