You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''
''என் மனைவி குண்டாக இருப்பதுதான் இந்தியாவின் பிரச்சனையா? வேறு எந்த பிரச்சனையும் இல்லையா?'' என்று பேஸ்புக்கில் பதிவிட்ட கேள்வி மூலம், நடிகை சரண்யா மோகனை கேலிசெய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவரது கணவர் அரவிந் கிருஷ்ணன்.
சரண்யா மோகன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குழந்தையுடன் வெளியிட்ட படத்திற்குக் கருத்து பதிவிட்டவர்களில் சிலர், நீங்கள் ஒல்லியாக வேண்டும், எடையைக் குறையுங்கள், நீங்கள் குண்டாக இருக்கும் படங்களை போடாதீர்கள் என பதிவிட்டிருந்தனர்.
அரவிந்த் கருத்து தெரிவித்த பிறகு சரண்யாவை விமர்சனம் செய்பவர்கள் கருத்து வெளியிடுவதை நிறுத்த, சரண்யாவுக்கு ஆதரவாகக் கருத்துகள் பதிவாகின.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள நடிகையாக இருக்கும் சரண்யா மோகன் மட்டுமல்ல, சாதாரண பெண்களும் இந்த 'குண்டான' பிரச்சனையில் இருந்து தப்பமுடியவில்லை என்று தெரிகிறது.
2016ல் மாட்டுக்கறி உண்டதாக பதிவிட்ட சென்னைவாசி ஹேமாவதியை மிக மோசமாக சித்தரித்து படங்கள் வெளியிடப்பட்டன.
''எருமை, பன்றி போன்ற விலங்குகளின் படங்களை வெளியிட்டு எனது உடல், எனது நிறம் பற்றி நிறைய கருத்துக்களை பலர் பதிவிட்டனார். மாட்டுக்கறி உண்பது என் உரிமை என்று கூறியதால் என்னை முறையற்ற வார்த்தைகளால் வசைபாடினர். என் கருத்துக்கு பதிலாக நான் ஏன் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என எல்லைமீறி பதிவிட்டனர்,'' என்று நினைவு கூர்ந்ததார் ஹேமா.
தனக்கு ஆதரவாக 'ஐ சப்போர்ட் ஹேமாவதி' என பலர் பதிவிடத் தொடங்கியதும், வசைபாடும் நபர்கள் பதிவிடுவதை நிறுத்திவிட்டனர் என்கிறார் ஹேமா.
குண்டு-ஒல்லி வணிகம்
பெண் ஒல்லியாக பெண் இருக்கவேண்டும் என்பது வணிகம் சார்ந்த கருத்து, அதை நம்பி பல நிறுவனங்கள் தொழில் நடத்துகின்றன என்கிறார் ஆவணப்பட தயாரிப்பாளர் கீதா இளங்கோவன்.
''மருத்துவ அறிவியலுக்கு புறம்பான எடை குறைப்பு மருந்துகள், பானங்கள் விற்கப்படுகின்றன, பயிற்சி கூடங்கள் சிலவும் செயல்பட்டுவருகின்றன. ஆனால் அவை எல்லாமே பணம் ஈட்டுவதற்கு என்பதால், எடை குறைப்பு குறைந்த காலத்தில் சாத்தியம் என்று அவர்கள் விளம்பரப்படுத்துவதை கேள்வி கேட்காமல் படித்த இளைய சமுதாயம் நம்புவது ஏமாற்றத்தை தருகிறது,''என்கிறார் கீதா.
இந்திய வர்த்தக சம்மேளனத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட முடிவுகளின்படி, 2015ல் இந்தியாவில் உடல் எடை குறைப்பு, அதிகரிப்பு, அழகுபடுத்தும் தொழில் ஆகியவை சுமார் ஒரு ட்ரில்லியன் ரூபாய்கள் பெறுமதியைத் தாண்டிய வணிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண் ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், மன உளச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மன உளச்சலை தரும் விவகாரம்
குண்டாக இருந்தால் அது தவறு என்ற எண்ணம், பள்ளிக்கூட மாணவிகளிடம் காணப்படுகிறது என்கிறார் வேலூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அரசு பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி.
''கடந்த 30 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறேன். குண்டாக இருக்கும் பெண் குழந்தைகள் மனசோர்வுடன் இருப்பதும், பள்ளி படிப்பை விட்டு நின்றுவிடும் சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளன. சில பெற்றோர்கள் குண்டாக இருக்கும் பெண் குழந்தைக்கு தேவையான அளவு உணவை கொடுக்காமல், குறைவாக கொடுப்பதையும் நான் பார்த்துள்ளேன்,,'' என்கிறார் செல்வி.
''ஏன் ஆண்கள் குண்டாக இருப்பதை அதிகமாக யாரும் கிண்டல் செய்வதில்லை? என்ற கேள்வியை முன்வைக்கிறார் ஆசிரியர் செல்வி.
தொடர்புடைய செய்திகள்:
''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''
பெண்கள் குண்டாக இருப்பது குற்றமல்ல என்கிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
''ஒல்லியாக இருக்கிறீர்களா, குண்டாக இருக்கிறீர்களா என்பது முக்கியம் இல்லை. நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதுதான் அவசியம். உடல்பருமன் என்பது குறையல்ல. உங்களது உடல் எடை சரியான அளவில் உள்ளதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உடல் எடை மட்டுமே உங்களது வாழ்க்கையின் லட்சியமாக எடுத்துக்கொண்டால் அது தேவையற்றது,'' என்கிறார் மருத்துவர் சாந்தி.
உடல் எடை கூடுவது என்பது ஒரே இரவில் நடக்காது. அதே போல எடையை குறைப்பது மட்டும் எப்படி சீக்கிரமாக நடக்கும் என்று கேள்வியெழுப்பிகிறார்.
ஆரோகியமாக இருக்க உடற்பயிற்சி செய்யலாம். அதிக எடையை குறைக்கலாம். ஆனால் பார்ப்பவர் எல்லோருடைய கண்களுக்கும் ஒல்லியாக தெரியவேண்டிய தேவையில்லை என்றார் சாந்தி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்