பருமனானாலும் உடல் தகுதியுடன் இருக்கமுடியும் என்பது கட்டுக்கதை: புதிய ஆய்வு

உடல் பருமனாக இருந்தாலும் மருத்துவ ரீதியாக உடல் தகுதியுடன் இருக்க முடியும் என்பது ஒரு கட்டுக்கதை என போர்த்துக்கலில் உரையாற்றிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னமும் பதிவு செய்யப்படாத இந்த ஆய்வு, பிரிட்டனில் வாழும் 35 லட்சம் மக்களின் குடும்ப மருத்துவர்களின் ஆவணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

உடல் பருமனாக இருக்கும் நபர்களுக்கு ஆரம்ப காலங்களில் இதய நோய், நீரிழிவு அல்லது அதிக கொழுப்பு ஆகியவை இருந்ததற்கு எந்த அறிகுறியும் இல்லையென்றாலும், இந்நோய்களில் இருந்து இவர்கள் அவர்களின் பிற்கால வாழ்க்கையில் பாதுகாக்கப்படவில்லையென்று தெரிய வந்துள்ளது, முந்தைய ஆராய்ச்சி முடிவுகளுக்கு முரணாக அமைந்துள்ளது.

உடல் பருமன் குறித்த ஐரோப்பிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளின் சுருக்கம் விவாதிக்கப்பட்டது.

கவர்ச்சிகரமான கோட்பாடாகக் கருதப்படும் ''பருமன் ஆனாலும் உடல் தகுதியுடன் இருப்பவர்கள்'' என்பது பருமனாக இருக்கும் நபர்களின் வளர்சிதை மாற்றக் காரணிகளான ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள் மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு கீழ் இருந்தால், கூடுதல் எடையுடன் இருப்பது பாதகமில்லை என்ற தத்துவத்தை சார்ந்து உள்ளது.

கடந்த 1995 முதல் 2015-ஆம் ஆண்டு வரை கிடைக்கப் பெற்ற பல மில்லியன் நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் மேற்கூறிய கூற்று உண்மையா என்று சோதித்தனர்.

30 அல்லது அதற்கு மேலான பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் உள்ள உடல் பருமனான நபர்களின் உடல் கூறுகளை இந்த ஆய்வின் ஆரம்பத்தில் கண்காணித்த போது, அவர்களுக்கு இதய நோய், நீரிழிவு அல்லது அதிக கொழுப்பு ஆகியவை இருந்ததற்கு எந்த அறிகுறியும் இல்லையென்பது தெரியவந்துள்ளது.

மிகவும் பருமனாக இருந்த நபர்கள், வளர்சிதை மாற்றக் காரணிகள் தொடர்பாக ஆரோக்யமாக இருந்தாலும், அவர்களுக்கு சாதாரண எடையுடன் இருப்பவர்களை விட இதய நோய், பக்கவாதம் மற்றும் இதை செயலிழப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டீஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனை சேர்ந்த மருத்துவரான மைக் நாப்டன் கூறுகையில், 'பரந்த அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பல ஆண்டுகளாக நிலவி வந்த ஓர் கட்டுக்கதை குறித்து தெளிவுபடுத்த முயன்றது போல அடிக்கடி ஆய்வுகள் நடந்ததில்லை'' என்று தெரிவித்தார்.

''இக்கண்டுபிடிப்புகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து கவனம் செலுத்த உடல்நலன் நிபுணர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் மேலும் கூறினார்.

''இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய விஷயம் என்னவென்றால், அதிக எடையுள்ள அல்லது பருமனான நபர்கள் மற்ற அனைத்து அம்சங்களிலும் ஆரோக்யமாக இருந்தாலும், அவர்களுக்கு இதய நோய் ஏற்பட அதிக ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளதுதான்'' என்று மைக் நாப்டன் குறிப்பிட்டார்.

''கூடுதல் எடையுடன் இருப்பது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக அளவு ஆபத்தினை உண்டாக்குகிறது'' என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆய்வு எந்த மருத்துவ இதழிலும் வெளியாகவில்லை. இந்த ஆய்வு மருத்துவ ரீதியாக சரியானதா என்று உறுதிசெய்ய பல சோதனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதனால், இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ள உடல் ரீதியான பாதிப்புகளின் தன்மை மற்றும் ஆபத்துக்கள் குறித்து, இறுதியான மற்றும் தெளிவான முடிவெடுக்க விஞ்ஞானிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பிரிட்டீஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனை பொறுத்தவரை, புகைப்பிடிக்காமல் இருப்பது, சீரான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது , மது அருந்துவதை கட்டுக்குள் அளவாக வைத்திருப்பது போன்ற பொதுவான உடல் நல ஆலோசனைகளை கடைபிடித்தால் அது மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பர்மிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் ரிஷி காலேயாஷெட்டி கூறுகையில், ''வளர்சிதை மாற்ற இயல்பு குறைபாடுகள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், உடல் பருமனான நபர்களிடையே உடல் குறைப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு உண்டாக்குவது, சுகாதார நலன் நிபுணர்களின் முன்னுரிமை பணியாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அனைவராலும் ஆய்வு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

உடல் பருமனாக இருந்தாலும் சரியான மரபணுக்களுடன் உடல் தகுதியுடன் இருக்க முடியும் என்று வேறு சில ஆய்வுகள் காட்டுகின்றன.

உதாரணமாக, கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியான ஆய்வொன்று, வளர்சிதை மாற்றக் காரணிகளால் உண்டாகும் நோய்கள் எதுவுமில்லையென்றால், உடல் எடை அதிகமுள்ள நபர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய இதய மருத்துவ இதழில் வெளியான ஆய்வொன்றில் , வழக்கமான எடையுடன் இருப்பவர்களை விட மிகவும் உடல் பருமனான நபர்கள், உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால், அவர்களுக்கு இதய நோய் அல்லது புற்று நோய் வரக்கூடிய ஆபத்து சரியான உடல் எடை கொண்டவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தைவிட அதிகமாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை மட்டும் கவனிப்பது மட்டுமல்ல, ஒருவர் எவ்வளவு உடல் எடை இருந்தாலும், சரியான உணவுகளை உண்பது மற்றும் உடல் பயிற்சிகள் செய்வது பொதுவான உடல்நலனுக்கு முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்