ஜாரவா பழங்குடியினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம் இந்தியா கோரிக்கை

அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களைக் காட்டும் விடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேபத்துக்குரிய வீடியா படங்கள் விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது.

உலகில் அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனங்களில் ஒன்று ஜாரவா. வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இன்னும் எஞ்சியிருக்கும் கடைசி இந்திய ஆதிவாசி இனங்களில் இதுவும் ஒன்று.

விடியோ பகிர்வு இணைய தளமான யூ டியூபில் உள்ள 20 விடியோக்கள் ஜாரவாக்களை பாதுகாக்க உதவும் சட்ட விதிகளை மீறுவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேபத்துக்குரிய விடியா படங்கள் விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஜாரவாக்களைப் படம் பிடிப்பது, விடியோ எடுப்பது அவர்களுக்கு உணவு அளிப்பது போன்ற நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

யூடியூப் சமூக ஊடகத்தில் உள்ள அந்த விடியோக்களை நீக்குவது குறித்து உள்துறை, வெளியுறவுத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை, பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகங்களிடம் என்சிஎஸ்டி முறையிட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய தேசிய பழங்குடியினர் ஆணைய செயலாளர் ராகவ் சந்திரா, விடியோ காட்சியில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியினரை நிர்வாண கோலத்தில் சுற்றித்திரிந்து விளையாடுவது போல காண்பித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

அந்த காட்சிகளைப் பார்க்கும்போது உரிய அனுமதியின்றி அவை எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

"ஜாரவா இன மக்களுடன் வெளியுலகினர் தொடர்புகளை ஏற்படுத்துவதால் உடல், சமூகம் மற்றும் கலாசார ரீதியாக அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்க அரசின் கொள்கை தெளிவாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

தடுக்க முடியுமா?

அரசின் கொள்கை ஒருபுறம் இருக்க, "ஜாரவாக்களை பார்ப்பதற்காக காடுகளுக்கு பணம் கொடுத்து சிலர் பயணம் செய்வதால் அந்த இனத்தவர்கள் சுற்றுலாவை ஈர்க்கக் கூடியவர்களாக உள்ளனர் என்றும் யூடியூப் விடியோக்கள் பற்றி கவலைப்படுவதை விட அந்த இனத்தவர்களை சந்திக்கச் செல்பவர்களைத் தடுக்கலாமே?" என்று ராகவ் சந்திராவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்த விஷயத்தில் மேலும் தீவிரமாகவும், மிகக் கடுமையாகவும் வழிமுறைகளை வகுத்து இனி இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த மாநில நிர்வாகத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம்" என்றார்.

பழங்குடியின மக்களின் எதிர்காலம் என்னவாகும்? என கேட்டதற்கு, "தற்போதுவரை அந்த பழங்குடியினத்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த பாரம்பரிய அணுகுமுறையைக் கடைபிடிக்காமல் அவர்களின் போக்குக்கே வாழ விட்டுளோம். ஆனால், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் அவர்களுடான அணுகுமுறை தெளிவாக எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுவதற்காக உலகம் முழுவதும் இருந்து நிபுணர்களை வரவழைத்து கருத்தரங்கு நடத்தவுள்ளோம்" என்று ராகவ் சந்திரா தெரிவித்தார்.

"பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தவர்களை அவர்களாகவே வாழ விடலாமா அல்லது மெதுவாக அவர்களை பொதுப்பகுதிக்கு ஒருங்கிணைக்கலாமா என்பது பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும்" என்றார் ராகவ் சந்திரா.

பாதுகாக்கப்பட்ட பழங்குடியினர் யார்?

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் (பாதுகாக்கப்பட்ட பழங்குடியினர்) ஒழுங்குமுறை 1956-ஆம் ஆண்டு விதிகளின்படி அந்தமானியர்கள், ஜாரவாக்கள், ஒங்கே, சென்டிலீஸ், நிகோபாரீஸ் மற்றும் ஷோம் பென்ஸ் ஆகிய இனத்தவர்கள், பழங்குடியினர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த இனத்தவர்களை வெளியில் உள்ளவர்களின் தலையீட்டில் இருந்து பாதுகாக்கும் அம்சங்கள் இந்த விதிகளில் உள்ளன.

அந்த இனத்தவர்கள் தொடர்புடைய தண்டனைக்குரிய அம்சங்கள் நிறைந்த சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் 2012-ஆம் ஆண்டில் விளம்பரங்கள் மூலம் வெளியிடப்பட்டன.

இது தொடர்பான அறிவிக்கையின் 7-ஆவது பிரிவில், வெளிநபர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்பவருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3 (ஐ)(ஆர்)- ஆவது பிரிவின்படியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

.அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் சுமார் 28,077 பழங்குடியினர் உள்ளனர். இதில் ஐந்து பழங்குடியினத்தவர்கள் 500-க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்