You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பேச்சு; கடும் மன உளைச்சலில் நடிகர் அஜித்
சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களையும், பெயரையும் பயன்படுத்தும் நபர்கள், திரைத் துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் கீழ்த்தரமாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டு வருவதால் அஜித் குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக நடிகரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நடிகர் அஜித்குமாரின் சட்ட ஆலோசகரான பரத் என்ற வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அஜித் குமார் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்றும், அவருடைய ஜனநாயக சிந்தனையை ரசிகர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் எப்போது அவர் திணித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், அஜித் குமாருக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாகவும், எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் அஜித்திற்கு அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சில நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தங்களின் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான கருத்துக்களை அஜித்தின் கருத்தாக பிரகடனப்படுத்துவதாகவும், அதுபோன்ற பயன்பாட்டாளர்கள் அஜித்தின் புகைப்படம் மற்றும் பெயரை அனுமதியின்றி பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற நபர்கள் சமூக வலைத்தளங்களில் திரைத்துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் மிகவும் கீழ்த்தரமாக பேசி வருவது நடிகர் அஜித்குமாருக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர், அவ்வாறான நபர்களை கண்டுபிடித்து களை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இம்மாதிரியான நபர்களின் செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் நடிகர் அஜித் குமார் தனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக வழக்கறிஞர் பரத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்குமுன், நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்' பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
தற்போது, சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் விவேகம் திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. யு டியூபில் வெளியான படத்தின் டிரைலரை இதுவரை 82 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இரண்டாண்டுகளுக்கு பிறகு அஜித்தின் திரைப்படம் வெளிவருவதால் அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.
இச்சூழலில், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்குமாறு அஜித் ரசிகர்களுக்கு கோரிக்கை வைக்கும் நோக்கில் இப்படியான ஓர் அறிக்கை வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :