காணவில்லை சுவரொட்டியில் சோனியா காந்தி படம்: ரே பரேலி தொகுதியில் ஒட்டியதால் பரபரப்பு

Sonia

பட மூலாதாரம், Hindustan Times

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் அவரது மக்களவைத் தொகுதியான ரே பரேலியில் இன்று (புதன்கிழமை)பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதேபோன்ற சுவரொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டு உள்ளூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

twitter

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, ரே பரேலியில் ஒட்டப்பட்ட சோனியாவை காணவில்லை என குறிப்பிடும் சுவரொட்டி

அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், "கடந்த மூன்று மாதங்களில் ஒரு முறைகூட ராகுல் காந்தி தங்கள் தொகுதிக்கு வரவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினரும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பினரும் இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

rahul

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, அமேதியில் ஒட்டப்பட்ட ராகுலை காணவில்லை என குறிப்பிடும் சுவரொட்டி

இந்நிலையில் சோனியாவை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள சுவெராட்டிகள் விவகாரத்திலும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு தொடர்பிருக்கலாம் என்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா கூறினார்.

ரே பரேலி தொகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் காலனி, மகானந்த்பூர், கோரா பஜார் ஆகிய பகுதிகளில் இந்த சுவெராட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ஒரு சுவெராட்டியில், "எங்கள் தொகுதி எம்.பி எங்கிருக்கார் எனத் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்தால் வெகுமதி தரப்படும் - இப்படிக்கு ரே பரேலி தொகுதி மக்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகள் எங்கெல்லாம் ஒட்டப்பட்டுள்ளதோ அங்கு சென்று அவற்றை அகற்றும் பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சோனியா காந்தியை காணவில்லை என்று ரே பரேலியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் குறித்து டிவிட்டரில் பரவலாக பயன்பாட்டாளர்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

செளரப் என்ற பயன்பாட்டாளர், "இதை முடித்துக் கொள்வோம். காங்கிரஸ் கட்சியை காணவில்லை என்ற சுவரொட்டியை ஒட்டுவோம்" என்று கூறி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

twitter

பட மூலாதாரம், Twitter

மற்றொரு டிவிட்டர் பயன்பாட்டாளர் ஸ்ரீராம், 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு பல முகங்கள் நிச்சயம் காணாமல் போகும் என்றவாறு தனியார் தொலைக்காட்சியின் செய்திக்கு அனுப்பிய பதிலில் தமது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

twitter

பட மூலாதாரம், Twitter

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு தொடக்கம் முதல் அவரது மக்களவை தொகுதியான ரே பரேலிக்கு செல்லவில்லை.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தையொட்டி கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ராகுல் காந்தி மட்டும் பிரசாரத்தை முன்னெடுத்தார்.

உடல் நலக்குறைவால் சோனியா காந்தி பிரசாரத்துக்கு செல்லவில்லை. அதன் பின்னர் வெளி நிகழ்ச்சிகளிலும் அவர் செல்லவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :