கமலுக்கு பதில் சொல்ல முடியாது - திமுக; கமலின் மலிவு அரசியல் புரியவில்லை - அதிமுக

TWITTER

பட மூலாதாரம், TWITTER

தமிழக முதல்வரின் ராஜிநாமாவை கோரும் விவகாரத்தில் கமல் ஹாசன் வெளியிடும் டிவீட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று திமுக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் கமலின் மலிவு அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, "கமலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கருத்து தெரிவிக்கக் கூடிய அளவுக்கு கமலை மிக முக்கிய நபராக நான் கருதவில்லை" என்றார்.

அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "கமல் ஒரு பொதுவான கருத்தைக் கூறியுள்ளார். தற்போதுள்ள கட்சிகள் கூர் மழுங்கி விட்டால் கூர் ஆன வேறொரு அமைப்பை தேட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திமுகவை குறிப்பிட்டு அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்றார்.

"அதிமுகவுக்கு எதிராக ஏற்கெனவே கமல் கருத்து வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இளங்கோவன், அவரது எண்ணத்தை பிரதிபலிக்கும் கட்சியாக திமுக உள்ளது" என்றார்.

TWITTER

பட மூலாதாரம், TWITTER

தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி தனியாகவும் அக்கட்சியின் அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு பிரிவினர் தனியாகவும் உள்ளனர்.

இந்நிலையில் கமல் ஹாசனின் டிவிட்டர் பதிவு குறித்து தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பிபிசி தமிழிடம் கூறுகையில், ""இதுவரை ஜாடை மாடையாகவும் மறைமுகமாகவும் அரசியல் பேசி வந்த கமல்ஹாசன் நேரடியாக அரசியலுக்கு வர முடிவெடுத்து விட்டது அவரது டிவிட்டர் பதிவு மூலம் தெளிவாகிறது" என்றார்.

"திராவிட இயக்கத்தை தாண்டி தமிழகத்தில் யாரும் கொடி கட்டி விட முடியாது என்ற நாஞ்சில் சம்பத், திமுகவும் அதிமுகவும் மழுங்கி விட்டன என்கிற தொணியில் கமல் பதிவிட்ட கருத்து, திமுகவுக்கு பொருந்துமே தவிர அதிமுகவுக்கு அது பொருந்தாது" என்றார்.

"தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்படவில்லை என்றும் கமல ஹாசன் என்கிற ரட்சகருக்காக தமிழகம் இப்போது காத்திருக்கவும் இல்லை" என்றும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வரின் ராஜிநாமாவை கோரும் கமலின் கண்களுக்கு, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உத்தர பிரதேசத்தில் எழுபது குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தெரியவில்லையா?" என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக் கொண்டு ஒரு சராசரி அரசியல் நடத்துவோரை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், விலையும் நிலையும் புரிந்த கலைஞனான கமல், ஏன் மலிவான அரசியலை நடத்துகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்றார் நாஞ்சில் சம்பத்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :