'ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்': கமல் ஆவேசம்

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைNOAH SEELAM
ஊரெல்லாம் ஊழல் பற்றிய ஓலம் கேட்பதாகவும், ஊழல் பற்றிய புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்குவந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கமல் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியதையடுத்தே இந்த யூகங்கள் எழுந்தன.
குழப்பத்தில் ஆழ்த்திய டிவிட்டர் செய்தி
இதற்கிடையில், தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று கமல் வெளியிட்ட செய்தி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
"அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்" என்று ஒரு ட்விட்டர் செய்தியும் அதன் பிறகு, "இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை, துடித்தெழுவோம் உம்போல் யாம் மன்னரில்லை, தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர், அடிபணிவோர் அடிமையரோ, முடிதுறந்தோர் தோற்றவரோ, போடா மூடா எனலாம் அது தவறு, தேடாப் பாதைகள் தென்படா, வாடா தோழா என்னுடன், மூடமை தவிர்க்க முனைவரே தலைவர், அன்புடன் நான்" என்று ஒரு செய்தியும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.
'புரியாதவர்களுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் நாளை வரும் செய்தி' என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், TWITTER
முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று அந்த ட்விட்டர் செய்தியில் இருந்ததை வைத்து, கமல் அரசியலில் ஈடுபடப்போவதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
கமல் மீது தமிழக அமைச்சர்கள் விமர்சனம்
இதையடுத்து தமிழக அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். கமல் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.
புதன்கிழமையன்று கமல்ஹாசன் குறித்து செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டபோது, "கமல்ஹாசனின் தொழில் சினிமாவில் நடிப்பது. அவர் அரசியலுக்கு வரும்போது அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்பேன்" என்று அவர் பதிலளித்தார்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று மாலையில் தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை கமல் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையி்ல், "ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா, ஆதாரம் உண்டா என்று கேட்கும் குணாதிசயம் கல்லுளிமங்கர் போன்ற ஊழலாருக்கே உரித்தான குணாதிசயம்" என்று தெரிவித்திருக்கிறார்.
"ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் மானமிகு ஜெயக்குமாரோ அல்லது எலும்பு வல்லுனர் எச். ராஜாவோ நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தேனோ அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி" என்றும் கமல் கூறியிருக்கிறார்.
'முதுகெலும்பிருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்'
கமல்ஹாசனின் நேற்றைய ட்விட்டர் பதிவு குறித்து விமர்சித்த பா.ஜ.கவின் எச். ராஜா, கமலுக்கு முதுகெலும்பிருந்தால் அரசியலுக்கு வரட்டும் என்று கூறியிருந்தார். அதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே எச். ராஜாவை எலும்பு நிபுணர் என்று கமல் கூறியிருக்கிறார்.

ஊரெல்லாம் கேட்ட ஊழல் ஓலம் மறந்திருந்தால் நினைவுபடுத்த மக்களே இருக்கிறார்கள், நடுவில் நான் எதற்குப் பூசாரி என்று கேட்டிருக்கும் கமல், அமைச்சர் கேட்டுக்கொண்டபடி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது தங்களது வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கவே இந்த அறிக்கையை விடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Twitter
மேலும், "இவ்வரசின் காலத்தில் ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களைவிட மாண்புமிக்கவர்கள் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் வரும். அத்தனை லட்சம் கேள்வியாளரையும் கைதுசெய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ.. இத்தனை லட்சம் பேரை கைது செய்ய போதிய சிறைகள் தமிழகத்தில் இல்லை" என்றும் கமல் கூறியிருக்கிறார்.
"சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று, ஒவ்வொரு படத்திற்கும் தனிச் சான்றிதழ் வாங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகுசிலரைத் தவிர மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர்" என்று கமல் குற்றம் சாட்டியுள்ளார்.
துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கிவழியும் என்றும் மக்களின் குரலைக் கேட்கும் மாண்பை எய்துங்கள் என்றும் கூறியுள்ள கமல், புகார் கொடுக்க வேண்டிய இணைய தள முகவரியையும் தன் அறிக்கையில் கொடுத்துள்ளார்.
அவரது இந்த அறிக்கை ட்விட்டரில் உடனடியாக ஆயிரக்கணக்கானவர்களால் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் அதற்கு விருப்பக்குறி இட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












