முதலமைச்சர் பழனிச்சாமியைப் புறக்கணிக்கிறதா 'நமது எம்ஜிஆர்'?
அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான செய்திகள் சில நாட்கள் புறக்கணிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது அப்படியல்ல என்கிறார் நாளிதழின் ஆசிரியர்.

பட மூலாதாரம், DIPR
அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழாக நமது எம்.ஜி.ஆர். என்ற நாளிதழ் வெளியிடப்பட்டுவருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த நாளிதழ் துவங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைந்த பிறகு நாளிதழின் கட்டுப்பாடு, அவரது தோழி சசிகலா வசம் சென்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு தற்போது கட்சி ஓ. பன்னீர்செல்வம் அணியாகவும் சசிகலா அணியாகவும் இரண்டாகப் பிளவு பட்டிருக்கும் நிலையில், இப்போதும் அந்த நாளிதழ் சசிகலாவின் வசமே இருந்துவருகிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை, பழனிச்சாமி, சசிகலா, தினகரன் குறித்த செய்திகளுக்கு சமமான அளவில் இடமளித்துவந்த நமது எம்.ஜி.ஆரில் திங்கட்கிழமை முதல் மாற்றம் தென்பட்டது.
'2 நாட்களாக முதலமைச்சர் குறித்த செய்தி வெளியாகாதது உண்மைதான்'
திங்கட்கிழமை வந்த நாளிதழில் பழனிச்சாமி குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் வேறு பல செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெற்றன. செவ்வாய்க்கிழமையன்று, அதற்கு முதல்நாள் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த செய்தியில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆணைப்படி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாக சசிகலாவின் பெரிய அளவிலான படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. முதல்வர் பழனிச்சாமி வாக்களித்த செய்தி, சிறிதாக வெளியாகியிருந்தது.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடர்பான செய்திகளை நமது எம்.ஜி.ஆர். புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து அந்த நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜிடம் கேட்டபோது, "கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் குறித்த செய்தி வெளியாகாதது உண்மைதான். ஆனால், இன்று அவரது செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். நாளையும் அப்படித்தான் வெளிவரவிருக்கிறது. கடந்த சில நாட்களாக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா குறித்து, ஊடகங்களில் பாதகமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்ததால், அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது புகைப்படங்களோடு அவர் குறித்த செய்திகளை வெளியிட்டோம். இப்போது மீண்டும் பழைய பாணிக்கு திரும்பிவிட்டோம்" என்றார்.
'ஆட்சியைவிட கட்சிதான் பெரிது'
"ஆட்சியைவிட கட்சிதான் எப்போதுமே பெரிது. பொதுச் செயலாளருக்கு சோதனை வரும்போது அவர் பக்கம் நிற்க வேண்டிய கடமை கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழுக்கு இருக்கிறது" என்கிறார் மருது அழகுராஜ்.
இதற்கு முன்பாக, அ.தி.மு.க. அரசு பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது, மத்திய பாரதீய ஜனதாக் கட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரையை மருது அழகுராஜ் எழுதியிருந்தார். அது குறித்து கேட்டபோது, ஆட்சி பா.ஜ.கவை ஆதரிக்கிறது என்றும் கட்சியைப் பொறுத்தவரை மக்களின் நலனே முக்கியமென்பதால் மத்திய அரசை விமர்சிக்க வேண்டிய விஷயங்களில் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
புதன்கிழமையன்று இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு விரைவில் முதல்வர் பழனிச்சாமி பதிலளிப்பார் என்று கூறினார்.
புதன்கிழமையன்று வெளிவந்துள்ள நமது எம்.ஜி.ஆர். இதழில் முதலமைச்சர் குறித்த செய்தி தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தாலும், சசிகலா, தினகரன் ஆகியோர் குறித்த செய்திகளும் பெரிய அளவிலான புகைப்படங்களுடன் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












