துண்டுப் பிரசுரம் கொடுத்த மாணவி குண்டர் சட்டத்தில் கைதானதற்கு கட்சிகள் கண்டனம்

சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்ற மாணவியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பதற்கு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

மாணவி வளர்மதி

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, மாணவி வளர்மதி

கடந்த ஜூன் 12-ஆம் தேதியன்று சேலத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி அருகே வளர்மதி என்ற மாணவி துண்டுப் பிரசுரம் ஒன்றை அங்கு வந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவந்தார்.

இயற்கைப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் அச்சிடப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில் 'நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுடன் கரம்கோர்ப்போம்' என்ற தலைப்பில் டெல்டா பகுதியில் செயல்படுத்தப்பட்டுவரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி கோரப்பட்டிருந்தது.

வளர்மதி துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது, அவரையும் அவருடன் இருந்த ஜெயந்தி என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த ஜெயந்தி, வளர்மதியின் தோழியின் தாயார் என்பது பின்னர் தெரியவந்தது.

வளர்மதி தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இதழியல் படித்துவருகிறார்.

துண்டுப் பிரசுரம்
படக்குறிப்பு, துண்டுப் பிரசுரம்

மாலை பத்திரிக்கைகளில் வெளியான செய்தி

அன்றைய மாலை நாளிதழ்களில், சேலத்தில் இரண்டு பெண் நக்ஸலைட்டுகள் கைது என்ற தலைப்பில் செய்திகள் இதுதொடர்பாக வெளியாயின. இந்த நிலையில், வளர்மதி மீது அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

பத்திரிக்கை தலைப்பு

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, பத்திரிக்கை தலைப்பு

சேலம் குற்றிவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வளர்மதி நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டார். அவருடன் இருந்த ஜெயந்தி விடுவிக்கப்பட்டார்.

வளர்மதி மீது மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு விவகாரங்களில் போராடியது தொடர்பான வழக்குகள் இருக்கின்றன. ஆகவே அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாநகர ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து திங்கட்கிழமையன்று அவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டது.

வளர்மதியின் கைதுக்கு கட்சிகள், ஆர்வலர்கள் கண்டனம்

"வளர்மதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் இரவுதான் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் இருந்த ஜெயந்தி விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், அன்றைய மாலை நாளிதழ்களில் நக்ஸலைட்டுகள் கைது, மாவோயிஸ்டுகள் கைது என செய்திகள் வெளியாகின. காவல்துறையினர் ஊடகங்களுக்கு ஏன் இப்படி செய்திகளைக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் சூழல் செயல்பாட்டாளருமான பியூஷ் மனுஷ்.

"வளர்மதி வன்முறையைத் தூண்டியதாகச் சொல்கிறார்கள். அவர் கொடுத்த நோட்டீஸில் அப்படி ஏதாவது வாசகம் இருக்கிறதா? அவர் மீது இருக்கும் 6 வழக்குகளிலும் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகிவருகிறார். எல்லாமே போராட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பான வழக்குகள். இப்போது குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருக்கிறார்கள்" என்கிறார் அவர்.

பத்திரிக்கை தலைப்பு

பட மூலாதாரம், FACEBOOK

தற்போதைய தமிழக அரசு குண்டர் சட்டத்தை வைத்து போராட்டக்காரர்களை ஒடுக்க முயல்வதாகவும் கூறுகிறார் பியூஷ். ஏற்கனவே திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

"மணல் கொள்ளையர்கள், ஊழல் செய்பவர்களை தண்டிப்பதற்குப் பதிலாக, மக்களுக்காக கோரிக்கைகளை முன்வைப்பவர்களை இந்த அரசு கைதுசெய்கிறது" என்கிறார் அவர்.

தமிழகத்தில் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுபவர்கள், தாங்கள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது தவறு என நிரூபித்தால் தவிர, ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியில்வர முடியாது.

இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாநகர ஆணையர் சஞ்சய் குமாரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர் பதிலளிக்கவில்லை. குறுஞ்செய்திக்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்