அமர்நாத்: 'இந்து கோயிலை 500 ஆண்டுக்கு முன் அடையாளம் கண்ட இஸ்லாமியர்'

    • எழுதியவர், மாஜித் ஜஹாங்கீர்
    • பதவி, பிபிசி

இந்திய அரசின் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்களுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான உறவுகள் மிகவும் ஆழமானது.

சரித்திரத்தில் பின்னோக்கி சென்று பார்த்தால், உள்ளூர் முஸ்லிம்கள் மற்றும் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கும் உள்ள தொடர்பு நன்றாக புரியும்.

திங்கட்கிழமையன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில், அமர்நாத்துக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஏழு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்க தரிசனத்திற்காக ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

நினைவலைகள்

60 வயதான குலாம் ஹசன் மலிக், கிராமத்தில் வசிப்பவர், அவர் தனது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார்.

அமர்நாத் குகைக்கோயிலை கண்டுபிடித்தவர்களின் பரம்பரையில் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் குலாம் ஹசன் மலிக். இவரது பரம்பரையைச் சேர்ந்த புடே மலிக், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அமர்நாத் குகைக்கோயிலை கண்டறிந்தார்.

குலாம் ஹசன் மலிக் 1970ஆம் ஆண்டில் இருந்து அமர்நாத் யாத்திரையுடன் இணைந்திருக்கிறார்.

"பரம்பரை பரம்பரையாக அமர்நாத் யாத்ரீகர்களுக்கு சேவை புரிந்ததைப் போலவே தற்போதும், எப்போதும் சேவை செய்ய நாங்கள் விரும்புகிறோம்" என்று சொல்லி, பழைய நினைவுகளை அசைபோடுகிறார் மலிக்.

காஷ்மீரில் பஹல்காமில் பட்கோட் கிராமத்தில் வசிக்கிறார் குலாம் ஹசன் மலிக். "அமர்நாத் ஆலயத்திற்கு செல்பவர்கள் யாத்திரை செல்லும் வழியில் எங்கள் கிராமத்திற்கு வருவார்கள், இங்கு தங்குவார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்த காஷ்மீரி நாட்டுப்புறப் பாடல்களை பாடுவார்கள்" என்று அவர் சொல்கிறார்.

"யாத்ரீகர்களை எங்கள் விருந்தினர்களாக கருதி அவர்களை அன்புடன் எங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வோம். உணவு, நீர், பானங்கள் குடிக்கக் கொடுப்போம். அமர்நாத் குகைக்கோயிலுக்கு அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வோம். தரிசனம் முடிந்தபிறகு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு செல்வார்கள். அமர்நாத் யாத்ரீகர்களுடன் இப்படிப்பட்ட சமூகமான உறவை நாங்கள் காலம்காலமாக பேணிவந்தோம். யாத்திரை தொடங்கும் காலத்திற்கு முன்பே எங்கள் கிராமப் பெண்கள் அதற்காக தயாராகிவிடுவார்கள். யாத்ரீகர்களை வரவேற்பதிலும், திரும்ப வழியனுப்பவதிலும் அக்கறையுடன் இருப்பார்கள்" என்று மலிக் நினைவுகளை மீட்டெடுக்கிறார்.

"யாத்திரையின்போது யாரும், சாதி, மதம், நிறம், இந்து, முஸ்லிம் என்று எந்தவித வேறுபாட்டையும் பார்த்ததில்லை. அமர்நாத் குகை மிகவும் புனிதமானது என்ற எண்ணத்தைத் தவிர வேறு எந்த எண்ணமும் யாரிடமும் இருந்ததில்லை. ஆண்டுதோறும் குகைக்கோயில் திறக்கும் நேரத்தையும், மூடும் நேரத்தையும் கேட்டுத் தெரிந்துக்கொள்வோம். அதேபோல், யாத்திரை தொடங்கும் சமயத்தையும், நிறுத்தப்படும் சமயத்தையும் தெரிந்து கொள்வோம்".

"யாத்திரையின்போது, இந்து சகோதரர்களுடன் இப்போதும் செல்ல விரும்புகிறோம், எங்களுக்கு பணம் முக்கியமில்லை" என்று குலாம் மலிக் ஆசையுடன் கூறுகிறார்.

வருமானம்

2002 - ஆம் ஆண்டு வரையில் அமர்நாத் குகைக்கு செல்லும் யாத்ரீகர்களால் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பட்கோட்டில் வசிக்கும் மலிக்கின் பரம்பரைக்கு கிடைத்துவந்தது.

"2002-இல் அமர்நாத் கோயில் வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, யாத்திரைக்கான விதிமுறைகள் அனைத்தும் மாற்றப்பட்டன. மலிக் குடும்பம், அமர்நாத் யாத்திரையில் இருந்து விலக்கப்பட்டது. முஸ்லிம் வக்ஃப் வாரியத்தில் இந்துக்களுக்கு இடம் இல்லாதபோது, இந்துக்களின் கோயில் வாரியத்தில் மட்டும் முஸ்லிம்கள் எப்படி இருக்க முடியும்? என்று எங்களிடம் கேட்கப்பட்டது. அப்போது எனக்கு தோன்றியது என்ன தெரியுமா? இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அவர்கள் இடைவெளியை உருவாக்க விரும்புகிறார்கள்".

"சிவபெருமான் பனிலிங்கமாக தங்களுக்கு எப்படி தரிசனம் கொடுத்தார்" என்று, அதாவது குகைக்கோவிலை கண்டறிந்தது குறித்த தகவல்களை தங்களது பாட்டன், முப்பாட்டன் என பரம்பரை பரம்பரையாக தங்களின் முன்னோர்கள் சொன்னதை மலிக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரன அஃப்சல் மலிக் சொல்கிறார்.

"அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் பாதை அந்தக் காலத்தில் கரடுமுரடானதாக இருக்கும்" என்று புடே மலிக் சொல்லியிருக்கிறார். எங்கள் பரம்பரையினர் அமர்நாத் குகையை புனிதமானதாக கருதுபவர்கள். ஆண்டுதோறும் அங்கு செல்வோம், யாத்ரீகர்களுக்காக இலவச மருந்துவ முகாம் நடத்துவோம். இன்றும்கூட யாத்ரீகர்கள் எங்களை சந்திக்க வீட்டுக்கு வருகிறார்கள். யாத்ரீகர்கள் வந்துபோவதால் எங்களுக்கும் பலன்கள் கிடைக்கும். இங்கு வசிக்கும், குதிரை வைத்திருப்பவர்கள், டெண்ட் போடுபவர்களின் வாழ்வாதாரமும் யாத்ரீகர்களையே சார்ந்து இருக்கிறது.

பிற செய்திகள்

அமர்நாத் யாத்ரீகர்களை நம்பியே பஹல்காமில் ஆயிரக்கணக்கான மக்கள், தொழில் நடத்துகின்றனர்.

திங்கட்கிழமையன்று அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அஃப்சல் மலிக் என்ன சொல்கிறார்?

"தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களல்ல, அரக்கர்கள்".

அமர்நாத் யாத்திரையின்போது ஸ்ரீநகர், அவந்திபுரா, பிஜபிஹாடா, அந்தர்நாக், பட்கோட் மற்றும் சில இடங்களில், யாத்ரீகர்கள் ஓய்வெடுத்துச் செல்வார்கள். இப்போது, ஸ்ரீநகர், மடன், பஹல்காம், சண்டஹன்வாரி ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது என்கிறார் அஃப்சல் மலிக்.

யாத்ரீகர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் அதனை முழுமையாக தீர்த்து வைக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்கிறார் பஹல்காமில் கடை வைத்திருக்கும் குல் முகம்மத்.

பிற செய்திகள்

பயணிகளுக்கு ஹோட்டல் வேண்டுமா, வண்டி, வாகன உதவி மற்றும் வேறு எந்தவித உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எந்த மதமாக இருந்தாலும் சரி, அதில் ஒருசிலர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று ஹாவ்டாவில் இருந்து அமர்நாத்துக்கு பத்து ஆண்டுகளாக தொடர்ந்து யாத்திரை மேற்கொள்ளும் ஒரு யாத்ரீகர் சொல்கிறார்.

காஷ்மீர் மக்கள் மிகவும் நல்லவர்கள். குதிரையில் செல்லும்போது கீழே விழுந்தபோது, அவர்கள்தான் என்னை தூக்கி உட்கார வைத்து, வேண்டிய உதவிகளை செய்தார்கள் என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :