You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் பேருந்து மீது தாக்குதல்: அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது திங்கள்கிழமை இரவு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தத்வாலியா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இரவு கூறுகையில், பட்டிங்கு என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் ஜம்மு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடைசியாக வந்த தகவலின்படி 6 அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதாகவும் சில காவலர்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தாகவும் கூறப்பட்டுள்ளது என்றார்.
அனந்த்நாக் மாவட்டத்தின் பட்டிங்கு என்ற பகுதியில் பல்தால் என்ற இடத்தில் இருந்து மிர் பஜார் பகுதிக்கு அமர்நாத் யாத்ரீகர்கள் அடங்கிய பயணிகளை அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை இரவு பேருந்து சென்று கொண்டிருந்தது. 8.20 மணியளவில் அந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இது பற்றி ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) முனிர் கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏழு பயணிகள் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் யாத்ரீகர்களைக் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினரை இலக்காக வைத்து நடத்தப்பட்டது என்றும் காவல்துறை ஐ.ஜி முனிர் கான் மேலும் கூறினார்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் உயரதிகாரி கூறுகையில், சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான பேருந்து மினி பேருந்து ரகத்தைச் சேர்ந்தது என்றும் அமர்நாத் ஆலய நிர்வாகத்தின் கீழ் அந்த பேருந்து பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது என்றார்.
இந்த விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரதமர் ஆலோசனை
அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுபற்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி "மிகவும் கொடூரமாக அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வார்த்தைகளைக் கடந்த வலியைத் தருகிறது. இந்த தாக்குதல், அனைவராலும் கண்டிக்கப்படத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி குறிப்பிடுகையில், "ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் யாத்ரீகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கரும்புள்ளியாகி விட்டது" என கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், "காஷ்மீரிகள் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியரும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டும். அமைதியை மிகவும் விரும்பும் மக்கள் யாத்ரீகர்கள். இந்த தாக்குதலின் மூலம் ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அவமானத்துக்கு ஆயுதக்குழுக்கள் உள்ளாக்கியுள்ளன" என்று கூறியுள்ளார்.
இரண்டாவது சம்பவம்
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் முகாம்களில் இருந்த அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து 2000-ஆவது ஆண்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 30 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் தீவிராத தலைவர் புர்ஹான்வானி நினைவஞ்சலி கூட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு வன்முறை வெடித்தது. அதன் எதிரொலியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் திங்கள்கிழமை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நி்லையில் லஷ்கர் இ தொய்பா தீவிராதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் திங்கள்கிழமை பிற்பகலில் கைதுசெய்தனர்.
அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த யாத்ரீகர்கள்
ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜிஜே09இசட் 9976 என்ற பதிவு எண் கொண்ட அந்த பேருந்து மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் கூறினர்.
இதையடுத்து ஆயுததாரிகள் மீது அருகே இருந்த காவல்துறையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். அதில் சில காவல்துறையினரும் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமர்நாத் ஆலயத்தின்கீழ் அந்த பேருந்து பதிவு செய்யப்படாமல் தனியார் பேருந்து என்ற முறையில் ஆலயத்துக்கு சென்று வந்ததால் அதற்கு விரிவான பாதுகாப்பை அளிக்க முடியவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக, ஆயுததாரிகள் கனபால் என்ற பகுதியில் உள்ள காவல் வாகன தணிக்கை சாவடி மீதுதாக்குதல் நடத்தினர். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
அனந்த்நாத் மாவட்ட நெடுஞ்சாலையில் இரவு 7 மணிக்கு மேல் யாத்திரைக்காக சென்று வரும் பேருந்துகள் அனுமதிக்கப்படாது என்ற காவல்துறையின் விதி உள்ளது.
ஆனால், அந்த விதியை குஜராத் பேருந்து ஓட்டுநர் மீறி யாத்ரீகர்கள் இருந்த பேருந்தை குறிப்பிட்ட பாதையில் ஓட்டிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுததாரிகள் எந்த குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
சம்பவத்தில் ஈடுபட்டதும் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கியதாகவும் அதைத்தொடர்ந்து ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.
இதையும் படிக்கலாம்:
காஷ்மீர்: தொடரும் மோதலும் தணியாத பதற்றமும்:
''எங்கள் மீது கற்களை வீசுவதும் மனிதத்தன்மையற்றதுதான்'' : காஷ்மீர் சி.ஆர்.பி.எஃப் படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்