You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும்': ஸ்டாலின் அறிக்கை
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்படவேண்டும் என்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் திங்களன்று (ஜனவரி 20) கூடவுள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவினை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
''ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட "சுற்றுச்சூழல் அனுமதியும்" மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்" தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் மத்திய அரசு பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தியுள்ளது எனக் கருதும் ஸ்டாலின், இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
'பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு அ.தி.மு.க அரசு ஆதரவளிக்கிறது'
''காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் ஏற்கனவே 341-க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, வேளாண் மண்டலம் என்பதற்குப் பதிலாக, அதைப் பாழ்படுத்தி ரசாயன மண்டலமாக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இதுமாதிரி பின்னடைவான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி - விவசாயிகளின் வயிற்றிலடித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தும் இந்த அனுமதிகள் எதிர்கால சமுதாயத்தையும் - தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் செயலாகும். மனிதநேயம் சிறிதேனும் இன்றி எடுக்கப்படும் இந்த முடிவுகள், மனிதகுலத்திற்கே பேரிடராக முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை,'' என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதோடு ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என சட்டமன்றத்தில் உறுதியளித்த அ.தி.மு.க. அரசு, அதுதொடர்பாக எவ்வித கொள்கை முடிவையும் இதுவரை எடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, மத்திய பா.ஜ.க. அரசின் செயலுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டுவதை அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குக் கூட இதுவரை அறிவுரைகள் வழங்கிடவில்லை என்று அறிக்கையில் விமர்சித்துள்ள அவர், ''விவசாயிகளின் நலன்களைப் புறந்தள்ளி மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டுச் சேர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கும் - முதலாளிகளுக்கும் உதவி உற்சாகப்படுத்துவது, தமிழக வேளாண் தொழிலை முற்றிலும் சீர்குலைத்து - காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது,''என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: