அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பில் குறை எங்கு ஏற்பட்டது?

    • எழுதியவர், பீனு ஜோஷி
    • பதவி, பிபிசி ஹிந்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் மீது திங்கட்கிழமை தாக்குதல் நடைபெற்றதையடுத்து, பாதுகாப்பில் எந்த இடத்தில் குறைபாடு ஏற்பட்டது என்று பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

அமர்நாத் யாத்திரை வாரியத்தின் தலைவர் என்ற முறையில் மாநில ஆளுனர் என்.என்.வோரா கூட்டிய அவரசக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று யாத்திரையின் தொடக்கத்திலேயே புலனாய்வு முகமைகள் எச்சரிக்கை விடுத்திருந்த்து என்றும் கூறப்பட்டது.

உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின்படி, அமர்நாத் யாத்திரையில், யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக, ராணுவம், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் மற்றும் மாநில காவல்துறையினர் என சுமார் ஒரு லட்சம் வீர்ர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதைத்தவிர, வேறு எந்த தகவலும் தெரியவில்லை. நிர்வாகத்தினர் யாத்திரையை கண்காணிப்பதற்காக ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்துகின்றனர்.

அமர்நாத் யாத்திரையில் கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 13,888 அடி உயரத்தில் பஹல்ஹாமில் அமைந்திருக்கும் அமர்நாத் ஆலயத்தின் அடிவார முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தார்கள்.

திங்கட்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு யாத்ரீகர்களும் குஜராத்தின் மேற்குப் பகுதியை சேர்ந்தவர்கள்.

கண்டனம்

அமர்நாத் யாத்திரையில் தீவிரவாத்த் தாக்குதல் நடைபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

திங்கட்கிழமையன்று அனந்த்நாக் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த காயமடைந்தவர்களை மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி சந்தித்தார். தாக்குதல் குறித்து அவர்களிடம் வருத்தம் தெரிவித்த முதலமைச்சர், மன்னிப்பும் கேட்டார்.

"எங்களை மன்னித்துவிடுங்கள், இப்படி நடந்திருக்கக்கூடாது" என்று மெஹ்பூபா கூறினார். அதற்கு முன்பு அவர் விடுத்த அறிக்கையில், "விருந்தினர்களுக்கு பாதுகாப்பு தருவதை பண்பாடாக கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களுக்கு இது ஒரு பின்னடைவு" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

யாத்ரீகர்கள் மீதான தாக்குதலை கண்டித்திருக்கும் தேசியவாத மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, "இந்தத் தாக்குதலை எவ்வளவு கண்டித்தாலும் அது குறைவானதுதான்" என்று கூறியுள்ளார்.

பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் அலி ஷா கிலானி, மீர்வாயிஜ் உமர் பாரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது காஷ்மீரின் இயல்புக்கு மாறானது.

இறந்தவர்கள்

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த்த் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜம்முவில் செவ்வாய்க்கிழமையன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கையாக, மாநில அரசு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது.

அனந்த்நாக் தாக்குதலுக்கு காரணம் லஷ்கர்-ஏ-தொய்பா என்றும், பாகிஸ்தான் தீவிரவாதி இஸ்மாயில்தான் தாக்குதலின் சூத்திரதாரி என்றும் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கான் கூறுகிறார்.

இதையும் படிக்கலாம்:

உச்சி மாநாடா, உச்சகட்ட காமெடியா? (காணொளி)