You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பான் ராணுவத்தின் பாலியல் அடிமைகள் பற்றிய காணொளி - தென் கொரியா வெளியிட்டது
ஜப்பான் ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட பாலியல் விடுதிகளில் இருக்குமாறு இரண்டு லட்சம் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக தென் கொரிய செயல்பாட்டாளர்கள் கணிக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் அதில் அடக்கம் என்றும் நம்பப்படுகிறது.
தற்போது வரை, புகைப்படங்களும், உயிர் பிழைத்திருப்பவர்களின் சாட்சியங்களுமே, இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் பெண்களை பாலியல் அடிமைகளாக இருக்க கட்டாயப்படுத்தியதற்கான ஆவணங்களாக இருந்தன.
முன்னர் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்த சீனாவின் யூன்னான் மாகாணத்தில், அமெரிக்க-சீன கூட்டுப் படையினரால் அக்காணொளி படமாக்கப்பட்டதாக அந்த ஆய்வுக்கு குழு கூறியுள்ளது.
அக்காணொளியில் காணப்படும் ஏழு கொரியப் பெண்களும் 1944-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களுடன் உரையாடும் ராணுவ அதிகாரி அமெரிக்க-சீன கூட்டுப் படையினரின், சீனாவைச் சேர்ந்த தளபதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதென்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம், ஜப்பான் தரப்பிலிருந்து போதிய அளவு மன்னிப்பு கேட்கப்படவில்லை என்றும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் தென் கொரியா கருதியதால், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நீண்ட காலமாகக் கசப்புணர்வை உண்டாக்கியிருந்தது.
இப்பிரச்சனையில் 2015-ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் ஒரு தீர்வை எட்டின. அதன்படி டோக்கியோ முறையாக மன்னிப்புக் கோரியதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக ஒரு பில்லியன் யென் (8.3 மில்லியன் டாலர், 5.6 மில்லியன் பவுண்டு) வழங்கவும் ஒப்புக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் இப்பிரச்சனை இருநாட்டு உறவுகளை தொடர்ந்து பாதித்து வருகிறது. மிகச் சமீபத்தில், பூசன் நகரில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்திற்கு வெளியில் தென் கொரியா ஒரு 'பாலியல் அடிமை' பெண்ணின் சிலையை வைத்ததால், ஜப்பான் தற்காலிகமாக தென் கொரியாவுக்கான தனது தூதரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதே போன்றதொரு சிலை சோலில் உள்ள ஜப்பான் தூதரகம் முன்பும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று டோக்கியோ விரும்புகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்