You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`பஸ்ஸை தொடர்ந்து ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னேன்': கலங்க வைத்த நிமிடங்கள் குறித்து பஸ் உரிமையாளர்
- எழுதியவர், ஜூபைர் அஹமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உணர்ச்சிகள் சூழப்பட்ட நிலையைக் காண முடிந்தது.
தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த சிலர் மிகுந்த கோபத்துடன் இருந்தார்கள். மைக்கை தங்கள் முன் நீட்டி பேட்டியெடுக்க முயன்ற ஊடகவியலாளர்களைப் பார்த்து கோபத்துடன் கூச்சலிட்டார்கள். ஒரு பெண், மைக்கைப் பிடுங்க முயன்றார்.
சில மணி நேரங்களுக்கு முன்புதான், அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருந்தது.
மாவட்ட மருத்துவமனை, காயமடைந்த யாத்ரீகர்களால் நிறைந்திருந்தது. சுமார் 16 பேர் இருந்தார்கள். சிலர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் இருந்தார்கள். சிலருக்கு வெட்டு மற்றும் சிராய்ப்புக் காயங்கள்.
அவர்களில், பஸ் உரிமையாளர் ஹர்ஷும் ஒருவர். "5-6 துப்பாக்கிதாரிகள் எங்கள் பஸ் முன் வந்து கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். "சரமாரியாக கற்களையும் வீசினார்கள். பஸ்ஸை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னேன்".
ஹர்ஷும், பெரும்பலான யாத்ரீகர்களும், வடஇந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஹிமாலய மலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்கு சென்றுவிட்டு, ஜம்மு அருகே உள்ள வைஷ்ணவதேவி கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். ஷ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது.
தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்தார். அவரது இரு சகோதரிகளும் அவருடன் பயணித்தார்கள். "எனக்கு அருகில் அமர்ந்திருத்த என் சகோதரி, இருக்கையிலேயே இறந்துவிட்டார். எனக்குப் பின்னால் இருந்தவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் மட்டும் தப்பிவிட்டேன்".
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், கால்களில் லேசாக காயமடைந்திருந்தார். "எனக்கு காயம் சிறிதுதான். ஆனால் என் சோகம் பெரியது. இந்தத் தாக்குதலில் எனது உறவினரை இழந்துவிட்டேன்".
காயமடைந்த யாத்ரீகர்
மருத்துவமனை ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களது ஆடை, போர்வைகளில் ரத்தக்கறையாக இருந்தது.
போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸுகள் எடுத்துச் சென்று கொண்டிருந்தன.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். அனந்த்நாக் நகர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதைப் போல் இருந்தது.
தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
அமர்நாத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறுகிறது. அந்த குகைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மிகக்கடினமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் அச்சத்தால், வழிநெடுக பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
கடந்த சனிக்கிழமை, காஷ்மீரின் பிரபல தீவிரவாத தலைவர் புர்ஹான்வானியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் என்பதால், இந்த ஆண்டு பாதுகாப்பு கூடுதலாக இருந்தது. யாத்ரீகள் இரண்டு நாட்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு திங்கட்கிழமைதான் மீண்டும் தொடர அனுமதிக்கப்பட்டார்கள். அன்று இரவே தாக்குதல் நடந்துவிட்டது.
பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு மாநில அரசு மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தாக்குதல் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்புதான், மாநில துணை முதலமைச்சர் நிர்மல் சிங் பிபிசிக்கு பேட்டியளித்தார். அமர்நாத் யாத்திரை தடையின்றி நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த பிறகு போலீஸ் குடியிருப்புக்கு வந்த அவர், மிகவும் பாதிக்கப்பட்ட மன நிலையில் காணப்பட்டார்.
கடந்த ஆண்டு புர்ஹான்வானி கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் வன்முறை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
காஷ்மீர் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நடந்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்