You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உள்ளூர் பழங்களை விட உயர்ந்த ரகமா வெளிநாட்டுப் பழங்கள்?
''ஆஸ்திரேலிய பேரிச்சை அரை கிலோ ரூ.50, வாஷிங்டன் ஆப்பிள் கிலோ ரூ. 150, நியூசிலாந்தில் இருந்து வரும் கிவி பழம் ஒன்று ரூ.35''
அதிகாலை ஐந்து மணிக்கு சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விதவிதமான பழங்கள் இப்படி கூவிக்கூவி விற்கப்படுகிறன.
பருவத்திற்கு ஏற்ப உள்நாட்டு பழங்கள் வந்துகுவிந்தலும், வெளிநாட்டுப் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சுமார் ஒரு லட்சம் டன் பழங்கள் சென்னை சந்தைக்கு வருவதாக கூறுகிறார் கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த துரைசாமி.
''சிம்லா, காஷ்மீர் என உள்நாட்டு ஆப்பிள் பழங்கள் இருந்தாலும், வாஷிங்டன் ஆப்பிளுக்கு கிராக்கி அதிகம். ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் இருந்து வரும் திராட்சைப் பழம் சில்லறை வியாபாரிகளிடம் சுமார் ரூ.300க்கு கிடைக்கும்''.
மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதால், வெளிநாட்டு பழங்களின் வரவும் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிபிட்டார்.
எகிப்து நாட்டில் இருந்து வரும் ஆரஞ்சு பழங்கள் பல கடைகளில் பெரிய பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகியுள்ள கண்ணை கவரும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பேரிச்சை பழங்கள் பழச்சந்தையின் தெருக்களில் உள்ள சிறிய கடைகளில் கூட குவியல் குவியலாக கிடைக்கின்றன.
''என் குழந்தைகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போக காசு கிடையாது. மாதத்தில் ஒரு முறை வெளிநாட்டு பழங்களை வாங்கிக்கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அன்றாடம் வாங்க முடியாது, கையில் காசு சேர்ந்தால், விதவிதமான பழங்களை வாங்குவேன்'' என்று கூறுகிறார் இல்லத்தரசி மீனா.
புதுவிதமான பழங்களை வாங்க கோயம்பேடு பழச் சந்தைக்கு அவ்வப்போது வருவதாக கூறும் வளசரவக்கத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜோசப், ''பழமுதிர் நிலையங்களிலும், தெருவில் வண்டி கடைகளில் கூட வெளிநாட்டு பழங்கள் கிடைக்கின்றன. கிவி, பேரிச்சை போன்றவை அதிக சத்துள்ள பழங்கள் என்பதால் அவ்வப்போது வாங்குகிறேன்,'' என்றார் ஜோசப்.
உள்நாட்டு பழங்களோடு ஒப்பிடும்போது வெளிநாட்டு பழங்களில்தான் சத்து அதிகம் என்ற நம்பிக்கை பலரிடம் நிலவுகிறது என்கிறார் அரசு இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவர் தீபா சரவணன்.
''வாழைப்பழம் சாப்பிட்டால் எடை கூடும் என்றும், சப்போடா சாப்பிட்டால் சர்க்கரைநோய் ஏற்படும் போன்ற தவறான கருத்துகள் மக்களிடம் உள்ளன. பழங்கள் சாப்பிடுங்கள் என்று கூறினால், வெளிநாட்டு பழங்களை, விலை அதிகமாக உள்ள பழங்களை வாங்கவேண்டும் என்று பலர் எண்ணுகின்றனர்,''என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் தீபா.
சுவைக்காகச் சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் நாம் வாழும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பழங்களை உண்பது நம் உடலுக்கு நல்லது என்கிறார் தீபா.
உள்ளுரில் கிடைக்கும் பழங்கள், வெளிநாட்டு பழங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், பழங்கள் பறிக்கப்பட்ட காலத்தில் இருந்து உங்கள் தட்டில் வந்துசேரும் நேரம் குறைவானதாக இருப்பதுதான் அவசியம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.
தமிழ்நாடு அரசின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஊட்டச்சத்து துறைக்கு தலைமை வகிக்கும் மீனாட்சி, ''அதிக அளவில் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பதப்படுத்தி வைக்கப்படும் பழங்களில் ஊட்டச்சத்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டேவரும். பறித்த சில தினங்களில் பழத்தை எடுத்துக் கொள்வது முக்கியம்''.
இரண்டு அல்லது மூன்று கிவி பழத்தில் கிடைக்க வேண்டிய வைட்டமின் சி ஒரு பெரிய நெல்லிக்கனியில் உள்ளது என்கிறார் மீனாட்சி.
''ஆஸ்திரேலியா ஆப்பிள் அல்லது வாஷிங்டன் ஆப்பிள் பழத்தில் கிடைக்கும் சத்தைக் காட்டிலும் நம் நாட்டில் விளையும் சப்போட்டாவில் நார்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம்,'' என்கிறார்.
ஒரே விதமான சத்துகொண்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பழங்கள் பட்டியலை தருகிறார் மீனாட்சி.
இன்றைய இளம்தலைமுறைக்கு பலஉள்நாட்டு பழங்களின் சுவைகூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகக் கூறுகிறார் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் தாவரவியல் துறை தலைவர் நரசிம்மன்.
''ப்ளுபெரி, ராஷ்பெரி, வெளிநாட்டு ஆரஞ்சு என இறக்குமதியாகும் பழங்களை விரும்பி வாங்குவோர் பலரும், மிகவும் எளிதாகக் கிடைக்கும் கலாக்காய், இளந்தைப் பழம், பனம்பழம், வில்வப்பழம் போன்ற பழங்களின் சுவைகளை அறியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது''.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்