இளைஞர்களின் மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் - ஆய்வு

இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலைதளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது, என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது.

14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக ஊடகங்களில் எது பயன்பாட்டாளர்கள் மீது மிகவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது.

கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.

பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனநல சுகாதார தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

'பற்றாக்குறை மற்றும் பதட்டம்'

ஒருவர் சமூக வலைதளங்களை அதிகமான பயன்படுத்தினால் அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், அதோடு மனநல சுகாதார பிரச்சனை உள்ள பயனர்களை அடையாளம் காட்டவேண்டும் என்று பொது சுகாதாரத்திற்கான ராயல் சொசைட்டியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

''சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்னையை தூண்டுவதாக இருக்கலாம்" என்று அறிக்கை எச்சரிக்கின்றது.

சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே சமயத்தில் அந்த அறிக்கை ,உதாரணத்துக்கு, இன்ஸ்டாக்ராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகிவற்றின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுததியிருப்பதாகக் கூறுகிறு.

வேறு எந்த வயதினரை காட்டிலும், இளைஞர்களில் சுமார் 90% பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் . இதன் காரணமாக, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளனர். ஆனாலும் தற்போதைய ஆதாரங்களை கொண்டு பார்க்கும்போது அந்த விளைவுகள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆழமான மனச்சோர்வுக்கு ஆளான நிலை

20களின் ஆரம்ப கட்டத்தில் உள்ள இஸ்லா, தனது பதின்ம வயதில், தனது வாழ்க்கையில் ஒரு சிரமமான நேரத்தில் சமூக ஊடங்களில் இணைந்தார்.

"சமூக வலைதளங்கள், நான் சமூகத்தில் இணைந்திருப்பது போன்ற ஒரு நம்பிக்கையை அளித்தன. நான் ஒரு மதிப்புடைய ஆள்தான் என்ற உணர்வைத் தந்தன`` , என்றார் அவர்.

``எனினும், நான் விரைவில் 'நிஜ வாழ்க்கை நட்பை' புறக்கணிக்க தொடங்கினேன். இணையத்தில் உள்ள நண்பர்களிடம் பேசி என் நேரத்தை செலவழித்தேன்``.

"நான் என்னுடைய 16 வயதில் ஆழ்ந்த மனச்சோர்வுற்ற நிலையை அடைந்தேன். இது பல மாதங்களுக்கு நீடித்தது முற்றிலும் மோசமாக இருந்தது''.

``இந்த சமயத்தில் சமூக ஊடகம் என்னை மிக மோசமாக உணரவைத்தது. ஏனென்றால், நான் எப்போதும் பிறரோடு என்னை ஒப்பிட்டு பார்த்துக்கொள்வேன். என்னை பற்றி மோசமாக எண்ணினேன்.''

"நான் 19 வயதாக இருந்தபோது, மற்றொரு முறை மோசமான மனநிலை பாதிப்பு எனக்கு ஏற்பட்டது. நான் சமூக ஊடகங்களில் நுழைந்து, என் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பேன், நான் அதைப் போல எதுவும் செய்யமுடியவில்லை என்று கருதுவேன். மற்றவர்களை போல நான் நல்ல நபர் அல்ல என்று எண்ணினேன்.''

சமூகஊடகங்களின் சாதகமான விளைவுகள்

இஸ்லாவின் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

"நான் மன ஆரோக்கியம் பற்றி நிறைய பதிவுகளை எழுதியிருக்கிறேன். அதைப் பற்றி நான் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளேன். மக்களுடன் அதைப் பற்றி நல்ல முறையில் உரையாடியுள்ளேன்.''

"நான் பேசுவதற்கு இது எனக்கு ஒரு மேடையைக் கொடுத்துள்ளது என்று எண்ணுகிறேன். பலருடன் பேசுவது என்னுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று நான் எண்ணுகிறேன்''

"ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களுடன் இன்னும் நண்பர்களாக இருக்கிறேன். அவர்களில் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்''

யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தளங்கள் தங்களுடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்ற தலைப்பில் பல கேள்விகளை இந்த இணையக் கருத்து கணிப்பு கேட்டது.

கருத்துகணிப்பில் பங்கேற்றவர்களிடம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பிரச்சனைகள் 14ஐ மையமாக வைத்து ஒவ்வொரு சமூக ஊடகங்களையும் வரிசைப்படுத்துமாறு கூறப்பட்டது.

இந்த தரவரிசைகளின் அடிப்படையில், மனநலத்தில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகம், யூடியூப் என்றும் அதற்கு அடுத்தபடியில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவை இருந்தன என்று தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த மதீப்பிட்டில், ஸ்னாப்சேட் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிக்கு மிகுந்த குறைந்த மதிப்பெண்களே கிடைத்தன.

சமூகஊடகங்கள் செய்யவேண்டியது என்ன?

ஆய்வில் வெளியாகியுள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மனநலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை சரிப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் அறிமுகப்படுத்தவேண்டும் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு சமூகவலைத்தளங்களை பயன்படுத்தினால், பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கை செய்ய ஒரு பாப்-அப் அறிவிப்பு தோன்று செய்வது. ( இதற்கு கருத்து கணிப்பில் பங்கேற்ற இளைஞர்களில் 70 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்தனர்).

மனநல பாதிப்பு உள்ளவர்களை சமூகஊடகங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவியை பற்றிய தகவல்களை மறைமுகமாக அளிப்பது.

டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் மாற்றப்பட்ட புகைப்படங்களை சுட்டிக்காட்டுவது. உதாரணமாக, ஃபேஷன் பிராண்டுகள், பிரபலங்கள் மற்றும் பிற விளம்பர நிறுவனங்கள் , இது போன்ற டிஜிடல் தொழில் நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்களில் , ஒரு குறியீடை பதிவு செய்ய அனுமதிக்கலாம்.

இந்த பரிந்துரைகள் பல இளைஞர்களுக்கு உதவும் என்று 'யங் மைன்ட்ஸ்' என்ற மனநல ஆரோக்கிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்த டாம் மேடர்ஸ் தெரிவித்தார்.

``சமூக ஊடங்களுக்குள் பாதுகாப்பை ஏற்படுத்துவது ஒரு முக்கியமான படி. இதைதான் நாங்கள் இன்ஸ்டாகிராம் உட்பட எல்லா சமூகஊடங்களுக்கும் வலியுறுத்துகின்றோம்``.

``ஆனால் குறிப்பிட்ட ரக தகவல்களை கொண்ட பதிவுகளில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவது மட்டுமே முழு தீர்வாகாது என்பதை அங்கீகரிக்கவேண்டியது முக்கியம்``.

சமூக ஊடகங்களில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்றும் அதன் ஆபத்துகள் பற்றியும் இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தடுப்புகளை தாண்டி, அவர்களை வந்தடையும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று அவர்களுக்கு கற்பிக்கவேண்டும்', என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, இன்ஸ்டாக்ராமிடம் கருத்து கேட்பதற்காக பிபிசி தொடர்பு கொண்டபோது, அதற்கு அந்த நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்