பொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் சமீபத்திய போக்கில் டி என் ஏ பரிசோதனை செய்து கொள்வதென்பது மேலை நாடுகளில் வாடிக்கையாகி வருகிறது.

அதன்மூலம் வெவ்வெறு விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை நமது உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த சாதனங்கள் எவ்வளவு துல்லியயமாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும் ?

தீவிர உடற்பயிற்சி பிரியரான 56 வயதுடைய மேண்டி மேயர், வாரத்திற்கு பலமுறை உடற்பயிற்சிகளை செய்துள்ளார். ஆனால் தனது உடலில் மாற்றமே நிகழாதது போன்று உணருகிறார்.

பின்னர், மேண்டியின் பயிற்சியாளர் டி என் ஏ ஃபிட் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார். முக்கிய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு உடலின் மரபணு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை இது சோதிக்கும்.

'' நான் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தேன்,'' என்கிறார் மேண்டி. '' அந்த வகையான அறிவைப் பெறுவதற்கு நான் மிகவும் விரும்பினேன்.''

பரிசோதனைக்காக தனது எச்சிலை அனுப்பிய மேண்டி, ஜனவரி மாதத்தில் தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த அறிக்கையை பெற்றார். அறிக்கையை பார்த்து ஆச்சரியப்பட்டர் மேண்டி.

''எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காஃபின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் எனக்கு பொருந்தாது மற்றும் ஏரோபிக் எனப்படும் காற்று உள்ளடங்கிய உடற்பயிற்சி முறைக்கு எனது உடல் நல்ல எதிர்வினையாற்றும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.''

மூன்று மாதங்களுக்கு பின்னர், 12- லிருந்து 10 ஆக மேண்டியின் சைஸ் குறைந்தது. மேலும், பல கிலோ எடைகளையும் குறைத்தார்.

''எடைக் குறைப்பு பரிசோதனை காரணமாகத்தான் எடை குறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,'' என்கிறார் லெய்செஸ்டரில் வசிக்கும் மேண்டி.

இதுபோன்ற சாதனங்களை மையமாக கொண்டு இயங்கும் உலகளாவிய சந்தை மதிப்பு 2022 ஆம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என சில ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவை எவ்வாறு வேலை செய்கின்றன மற்றும் அதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் ?

டி என் ஏ ஃபிட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஏவி லாசரோவ், நாம் என்ன மாதிரியான மரபணுக்களை கொண்டு பிறந்துள்ளோம் மற்றும் நாம் வாழும் சுற்றுச்சூழல் எப்படிப்பட்டது ஆகியவற்றின் தனிப்பட்ட கலவையை சார்ந்ததே என விவரிக்கிறார்.

CYP1A2 மரபணு குறித்து அவர் உதாரணம் தருகிறார். அதுதான் 95% காஃபின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

''மரபணுவின் மாறுபாடுகளைப் பொறுத்து சிலருக்கு வளர்சிதை மாற்றங்கள் வேகமாக நடைபெறும், சிலருக்கு மெதுவாக நடைபெறும். இதனை தெரிந்து கொள்ளும் பட்சத்தில், கஃபின் உட்கொள்ளும் அளவிலிருந்து சிறந்த தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும்.''

Orig3n நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராபின் ஸ்மித், தங்கள் உடல்களுக்கு எது சரியானதாக இருக்கும் என்ற அறிவை இச்சோதனைகளின் முடிவுகள் வெளிக்காட்டும் என்கிறார்.

''நீங்கள் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள். இது உங்கள் நேரத்தை, சக்தி மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும்.''

இதுபோன்ற சாதனங்களால் கிடைக்கும் நன்மைகள் விற்பனை யுத்திக்காக அளவுக்கதிமாக கூறப்படுவதாக மரபணு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

'' தங்களுடைய மரபணு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு எதிரானவன் நான் அல்ல, ஆனால் இந்த சோதனை முடிவுகள் மற்றும் அதன் வரம்புகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன,'' என்கிறார் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த மரபணு நிபுணர் ஜெஸ் பக்ஸ்டன்.

''எனினும், தற்போது இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் பயனுள்ள தகவல்கள் என்பது தற்போது மிகவும் குறைவாக உள்ளது''

சான் ஃபிரான்சிஸ்கோ சேர்ந்த ஹாபிட் என்ற சாதனத்தில் டி என் ஏ மாதிரிகளின் தொடர், ரத்த பரிசோதனைகள் மற்றும் குடிக்க ஓர் குளிர்பானம் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.

குளிர்பானத்தை குடிப்பதன் மூலம் கொழுப்புகள், கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் எவ்வாறு கிரகிக்கப்படுகின்றன போன்ற விவரங்களை நிறுவனத்தால் அளவீடு செய்ய முடியும்.

''மற்றவை வெறும் டி என் ஏவை மட்டுமே அளவீடு செய்யும். ஆனால் ஹாபிட் சாதனம் ஒட்டுமொத்த உடலும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை நோட்டமிடும்,'' என்று அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நீல் கிரிம்மர் கூறியுள்ளார்.

ஆனால், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஓர் அங்கமாக குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த உணவையும், நிறையக் காய்கறிகளயும் உட்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு பல ஆண்டுகளாக நம்மிடையே பழக்கத்தில் இரு்பபதைப் போல, ஒரு சோதனை கருவி தேவையா?.

நீங்களே முடிவு செய்யுங்கள்.

பிற செய்திகள் :

பிரபல கடல் உடும்பு காணொளிக்கு பாஃப்தா விருது (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்