You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்
துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.
"இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.
அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.
பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.
"என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
அழுத்தம்
சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.
அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.
"நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை" என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.
"இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்" என்று அவர் அங்கலாய்கிறார்.
தொடர்புடைய செய்திகள்:
ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.
யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.
தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமானத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.
உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கின்றனர்.
ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,
இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுகிறது.
"மகளிர் சிறப்பு மருத்துவர்கள் கிழிந்துபோன கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கின்றனர். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் ராசிட், "சில மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில்லை. கன்னித்தன்மையை புனிதப்பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை. எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன்” என்று தெரிவிக்கிறார்.
"இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடுகளுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது. நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம்தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.
"பாசாங்குத்தனம்"
வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.
பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.
"வெளிப்படையான துனீசிய சமூகத்தில் இந்த விடயத்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத்தனம் உடையவராக மாறிவிடுகிறோம்" என்று சமூகவியலாளர் சாமியா எல்லௌமி தெரிவிக்கிறார்.
"நவீன சமூகத்தில் வாழ்வதாக நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், பெண்களின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்றபோது, அதிக நவீனத்துவம் இல்லை என்பதால் ஒரு வகையான பழமை வாய்ந்த சமூக பழமைவாதத்தை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
"கன்னித்தன்மை மிக மிக முக்கியம்"
பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தியாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.
"என்னை பொறுத்தமட்டில் இது மிக மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.
"திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித்தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். கன்னித்திரையை ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை நம்பவில்லை. அது சரியாக செயல்படும் என்று எண்ணவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்ததாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், "துனீசிய பராம்பரியம் பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.
"என்னைப் பொறுத்தமட்டில், இது முற்றிலும் பாசாங்குதனம்" என்று தெரிவித்த அவர், "திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்துகொள்ளலாம். அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும்போது எவ்வாறு குறை சொல்ல முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.
பிற செய்திகள்
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :