You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீதக்காதி - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் அடுத்த படம். விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். இத்தோடு, விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் சேர்ந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'சீதக்காதி'.
படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான 'ஒன்லைன்' என்பதால் இந்தப் பெயர்.
தமிழில் நாடகக் கலை உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார். ஆனால், அவரது கலை இறப்பதில்லை. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது படம்.
இம்மாதிரியான ஒரு கதையை யோசிக்கும் துணிச்சலுக்காகவே இயக்குனரை ஒரு முறை பாராட்டிவிடலாம். படம் துவங்கியதும் கிட்டத்தட்ட அரை மணி நேரம்வரை விஜய் சேதுபதியின் நடிப்பில் நீள நீளமான நாடகக் காட்சிகள் வருவதும், மிக மோசமான, எதிர்பார்க்கத்தக்க பின்னணி இசையுடன் சோகமான சம்பவங்கள் நடப்பதும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஆனால், ஆதிமூலம் பாத்திரம் இறந்தவுடன் முற்றிலும் மாறான திசையில் படம் செல்கிறது.
அதுவரையிலான திரைக்கதையும் பின்னணி இசையும் முழுவதும் உடைபட்டு, வேறு ஒரு அனுபவத்திற்கு கூட்டிச் செல்கிறது படம். இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.
ஆனால், சில பலவீனங்களும் இருக்கின்றன. படம் துவங்கி நீண்ட நேரத்திற்கு படத்தின் திசையே புரியாமல் சோர்வளிக்கிறது. பிறகு வரும் பல காட்சிகளில் நம்பகத்தன்மை ரொம்பவுமே மிஸ்ஸிங். "ஃபேண்டஸி" என்று ஒப்புக்கொண்டால்கூட, அதற்கான லாஜிக்கும்கூட சில இடங்களில் இல்லாமல்போவது ஏமாற்றமளிக்கிறது.
ஆனால், இதனை தனது கலகலப்பான, எதிர்பாராத திருப்பங்களால் சரிசெய்கிறார் இயக்குனா்.
படத்தில் குறைந்த நேரமே வருகிறார் விஜய் சேதுபதி. எந்த ஒரு முன்னணி நடிகருமே மிகச் சாதாரணமாக நடித்துவிட்டுப்போகக்கூடிய பாத்திரம். விஜய் சேதுபதியும் அதைச் செய்திருக்கிறார்.
ஆனால், படத்தில் வரும் பல சிறிய பாத்திரங்கள் பின்னியெடுக்கிறார்கள். அர்ச்சனா, மௌலி, புதிய ஹீரோக்களாக நடிப்பவர்கள், இயக்குனர் மகேந்திரன், ரம்யா நம்பீசன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சியில் முத்திரை பதிக்கிறார்கள்.
'96' படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்திலும் தனித்துத் தெரிகிறார். முன் பாதியில் ஒரு பாணியிலும் பிற்பாதியில் வேறு பாணியிலும் ஆச்சரியப்படுத்துகிறார்.
பல காட்சிகள் சிறியதாக இருந்திருக்கலாம். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது. ஆனால், நிச்சயம் பொறுமையாக, நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய திரைப்படம்தான் 'சீதக்காதி'.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்