You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IMDB சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் பட்டியலில் 96, ராட்சசன் - என்ன சொல்கிறார் '96' இயக்குநர்?
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
உலகம் முழுவதும் திரைப்பட விமர்சன ரேட்டிங்கிற்காக சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இணையதள பக்கமான ஐஎம்டிபி, இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ட்விட்டரில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில் முதல் பத்து இடங்களில் இரண்டு நேரடி தமிழ் படங்களும், இரண்டு நேரடி தெலுங்கு திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
முதலிடத்தில் இந்தித் திரைப்படமான 'அந்தாதுன்' இடம்பெற்றுள்ளது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஐஎம்டிபியில் 9/10 ரேட்டிங் பெற்றுள்ளது.
பார்வையற்ற ஒரு பியானோ கலைஞர் வாழ்வில் திடீரென நடக்கும் தொடர் மர்மச் சம்பவங்கள் மற்றும் அது நாயகனின் வாழ்வில் ஏற்படுத்தும் திருப்பங்களை விவரிப்பதே அந்தாதுன் திரைப்படத்தின் சாராம்சம்.
நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த 'பதாய் ஹோ' எனும் திரைப்படமும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அமித் ஷர்மா இயக்கத்தில் வெளிவந்த பதாய் ஹோ 8.2 ரேட்டிங் பெற்றுள்ளது. பத்து சிறந்த படங்கள் பட்டியலில் இப்படத்திற்கு ஐந்தாமிடம் கிடைத்துள்ளது.
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'சஞ்சு' திரைப்படம் பத்தாவது இடம் பிடித்துள்ளது.
அலியா பட் நடித்து வெளியான ராஜி திரைப்படம் இப்பட்டியலில் 7.8 ரேட்டிங்குடன் ஒன்பதாவது இடத்திலும், ராஜ்குமார் ராவ் - ஷ்ரத்தா கபூர் நடித்த ஸ்ட்ரீ எனும் த்ரில்லர் திரைப்படம் 8.1 ரேட்டிங்குடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.
தமிழர் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் உந்துதல் அடிப்படையில் எடுக்கப்பட்ட இயக்குனர் பால்கியின் பேட்மேன் (PADMAN) திரைப்படம் 8.1 ரேட்டிங்குடன் ஆறாவது இடத்தில் உள்ளது. பெண்களுக்கான நாப்கின் உருவாக்குவதற்காக நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்தவற்றை விளக்கும் திரைப்படம் இது.
தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிப்பில் வெளியான ’ரங்கஸ்தலம்’ மற்றும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ’மகாநடி’ படமும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் திரைப்படமான ’ராட்சசன்’ ஐஎம்டிபி பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. 'முண்டாசுப்பட்டி' இயக்குனர் ராம் குமாரின் இரண்டாவது படமான ராட்சசன் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. இத்திரைப்படத்தில் கிறிஸ்டோபர் எனும் வில்லன் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா நடித்த ’96’ திரைப்படம் ஐஎம்டிபி பட்டியலில் 9.1 ரேட்டிங்குடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
பள்ளிப்பருவ காதலை நெஞ்சில் சுமந்து திருமணமே செய்துகொள்ளாமல் வாழும் காதலனை பல வருடங்களுக்கு பிறகு காதலி சந்திப்பதும். அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவையும் உரையாடலையும் விவரிக்கும் இத்திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது.
ஐஎம்டிபியில் தான் இயக்கிய 96 திரைப்படம் இடம்பிடித்ததில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட இயக்குநர் பிரேம்குமார் தற்போதைய ரசிகர்கள் மனநிலை, என்ன மாதிரியான திரைப்படங்களை வரவேற்கின்றனர் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
'' ரசிகர்கள் தற்போது பல வகையான திரைப்படங்களையும் ரசிக்கிறார்கள். வணிக திரைப்படங்கள் மட்டுமின்றி கதையம்சம் உள்ள படங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். 1980களுக்கு முன்பு நல்ல கதைகளை கொண்ட, கதைகளிலேயே வெவ்வேறு பரிமாணம் கொண்டவை வெளியாகி வந்தன. தற்போது மீண்டும் கதையம்சம் உள்ள திரைப்படங்களுக்கான வரவேற்பு கிடைக்கத் துவங்கியுள்ளது,'' என்றார்.
96 திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு, வெற்றி மற்றும் அது தொடர்பான உரையாடல்கள் குறித்து முன்கூட்டியே கணித்திருந்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேம் குமார் அப்படி எதுவும் யோசிக்கவேஇல்லை என்கிறார்.
ரசிகர்களின் தற்போதைய மனநிலையை அறிய இயக்குநராக என்னென்ன யுக்திகளை கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், '' ரசிகர்களின் மன ஓட்டத்துக்குக்காக ஒரு கதையை தயார் செய்ய முடியாது. முதலில் கதை எனக்கு திருப்திகரமாக இருந்தால் முழுமையாக கதையை தயார் செய்த பிறகு சிறு. சிறு விஷயங்களை வேண்டுமானால் சேர்க்கவோ. நீக்கவோ செய்வதே எனது பாணி,'' என்கிறார்.
கதை குறித்து உறுதியான பார்வை மற்றும் நம்பிக்கை இல்லாமல் ரசிகர்களின் மனநிலைக்காக எழுதி இயக்குவதில் உடன்பாடில்லை என்கிறார்.
''யாருடனாவது போட்டியிட்டால்தான் வெற்றி என ஒன்றைச் சொல்ல முடியும். படத்தை தயாரித்தவர்களுக்கு வணிக ரீதியாக லாபம் தந்தது என்று வேண்டுமானால் குறிப்பிடலாம் ஒரு படைப்பாளியாக மக்கள் ஏற்றுகொண்டார்களா இல்லையா என்பதைத்தான் பார்க்கவேண்டும் இத்திரைப்படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி'' என பிபிசி தமிழிடம் கூறினார் பிரேம் குமார்.
பட்டியலில் ராட்சசன் திரைப்படம் இரண்டாமிடம் பிடித்ததற்கு இயக்குநர் பிரேம் குமார் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐஎம்டிபி ரேட்டிங்கை பொறுத்தவரையில் அதன் பயனர்கள் எவ்வளவு ரேட்டிங் தருகிறார்கள் என்பது மட்டுமின்றி பிரத்யேக சூத்திரங்கள் மூலம் ஒவ்வொரு படத்திற்குமான ரேட்டிங் வழங்கப்படுகிறது. அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது எனினும் எந்த கணித முறைகளை பயன்படுத்துகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல இயலாது என ஐஎம்டிபி தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :