You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவ்வாயில் வீசும் காற்றின் ஓசையை பதிவு செய்த பிரிட்டன் சாதனம்
செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய 'இன்சைட் லேண்டர்' ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்ற செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது.
ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார்.
"இன்சைட் ஆய்வுக் கலம் தமது காதுகளைக் கூர்மையாக வைத்துக் கேட்பதைப் போன்றது இது".
இந்த காற்றால் ஏற்பட்ட அதிர்வை கொடிக் கம்பத்தில் உள்ள கொடி காற்றில் அசைவதுடன் ஒப்பிடுகிறார்.
காற்றை இடைமறித்து கொடி அசையும்போது அலைவரிசையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு அதனை மனிதக் காதுகளால் கேட்க முடிகிறது. இதையே கொடி படபடக்கிறது என்கிறோம் என்கிறார் அவர்.
இன்சைட் ஆய்வுக் கலத்தில் உள்ள அழுத்தத்தை உணரும் கருவியும் காற்று கடந்து போனதைப் பதிவு செய்துள்ளது.
வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி இந்த காற்று வீசும் வேகம், விநாடிக்கு 5 முதல் 7 மீட்டர் வேகத்தில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
இந்த திசையில் காற்றுவீசும்போது விட்டுச் சென்ற தூசுப் படிமங்கள் இருப்பதைக் காட்டும் படங்கள் சொல்லும் செய்தியுடன் இந்தக் கண்டுபிடிப்பும் ஒத்துப் போகிறது.
ஆறுமாத காலம் பயணித்து செவ்வாய்க்கு சென்ற இந்த ஆய்வு வாகனம் நவம்பர் 26-ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது. அத்துடன் இது செவ்வாயின் சுற்றுப்புறங்களையும் ஆராய்ந்துவருகிறது.
செவ்வாயின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ள சமவெளியான பகுதியில் இது தரையிறங்கியுள்ளது. இந்தக் கோளின் உள்ளமைப்பை ஆராய்வதே இந்த ஆய்வுப் பயணத்தின் நோக்கம்.
நிலநடுக்கத்தை ஆய்வு செய்யும் கருவியைத் தவிர இந்த ஆய்வுக் கலத்தில் உள்ள ரேடியோ அலைகளைக் கொண்டு ஆராயும் கருவி ஒன்று, செவ்வாய் எப்படி தன் அச்சில் சுழல்கிறது என்பதை ஆராயும். வெப்பத்தை ஆராயும் கருவி ஒன்றும் இதில் இருக்கிறது. இது செவ்வாயின் மண்ணுக்குள் புதைந்து ஆய்வு செய்யும்.
செவ்வாயின் மேற்பரப்புக்கு கீழே, உட்கரு வரை உள்ள உள்ள எல்லா பாறை அடுக்குகளின் நிலையையும், தன்மையையும் பற்றிய தகவல்களை இந்த ஆய்வுக் கலம் திரட்டும் தரவுகள் வெளிப்படுத்தும்.
இந்த பாறை அடுக்குகளைப் பற்றிய தகவல்கள் புவியின் பாறை அடுக்குகளைப் பற்றிய தகவல்களோடு ஒப்புமைப் படுத்தியும், வேறுபடுத்தியும் பார்க்கப்படும்.
இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலத்தின் உணர்வுக் கருவிகள் செவ்வாய் கிரகத்தின் நில நடுக்கங்களை (அல்லது செவ்வாய் நடுக்கம்) பற்றி ஆராய்வதில் கவனம் குவிக்கும்.
இந்த செவ்வாய் நடுக்க ஆய்வுக் கருவியை உருவாக்க பிரிட்டன் விண்வெளி ஆய்வு முகமை 4 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :