கடும் பசியால் வாடிக்கையாளர் உணவை உண்ட ஊழியருக்கு ஆதரவாக எழும் குரல்கள்

    • எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆன்லைன் பதிவு மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோவின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் உணவை திறந்து உண்டு மீண்டும் அதனை பேக் செய்து வைப்பது போலக் காட்டும் காணொளி வைரலானதை அடுத்து அந்த ஊழியரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

ஆனால் அது தொடர்பாக இருதரப்பட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதை காணமுடிகிறது.

ஒருதரப்பினர் அவர் பசியால் அதை செய்கிறார் பாவம் என்றும், அதிக ஊழிய நேரத்தின் காரணமாகவே அவர் இதனை செய்கிறார் அவரை மன்னித்து விட வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் அவர் செய்வது தவறு என்றும், நேர்மையாக நடந்து கொள்ளாத அவரை தண்டிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

ஸ்விகி, ஜொமாட்டோ போன்ற உணவு செயலிகள் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலாக இருக்கிறது.

ஜொமாட்டோவில், இந்தியா முழுவதும் சுமார் 150,000 பேர் அந்நிறுவனத்தில் பணிபுரிவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. ஜொமாட்டோ போன்ற மற்றொரு உணவு ஆர்டர் செய்யும் செயலியான ஸ்விகியில், சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

பொதுவாக இம்மாதிரியான நிறுவனங்கள் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டெலிவரிகளை செய்கிறார்கள் போன்ற தகவல்கள் எதையும் கூறுவதில்லை. ஆனால் சமீபமாக சுமார் 21 மில்லியன் உணவு ஆர்டர்களை ஒவ்வொரு மாதமும் பெறுவதாக ஜொமாட்டோ தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த துறையின் மொத்த நிதி மதிப்பு எவ்வளவு என்ற தகவல் இல்லை.

பணி சுமையே காரணமா?

கடந்த மாதம் ஸ்விகியில் பணிபுரிபவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு ஒரு ஆர்டருக்கு வீதம் கொடுக்கப்படும் தொகையை உயர்த்திக் கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மாதிரியான உணவு டெலிவரி செய்யும் துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகபடிப்படியான வேலை பளு இருப்பதாகவும், பணிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உணவு இடைவேளைக்கான போதிய நேரம்கூட வழங்கப்படுவதில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்விகியில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர், "தற்போது ஆர்டர் ஒன்றிற்கு 35 ரூபாய் தருகிறார்கள். அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும் சமயங்களில் உணவு இடைவேளைக்கு போகவும் நேரம் இருப்பதில்லை. தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயனித்துக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிரமமான ஒரு வேலையாகதான் உள்ளது" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அவர்.

மேலும் தாங்கள் பயணம் செய்ய தேவையான பெட்ரோலுக்கு தங்களின் பணத்தைதான் செலவழிக்க வேண்டும் என்றும், வாகனங்களை பராமரித்துக் கொள்ள வேண்டியதும் தங்களின் பொறுப்பே என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஜொமாட்டோவை சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது, எங்களிடம் பணிபுரிபவர்கள் சுதந்திரமாக பணிபுரியலாம். எப்போது வேண்டுமோ அவர்கள் லாகின் (Login)செய்து கொள்ளலாம் எப்போது வேண்டுமோ அப்போது லாக் அவுட் செய்து கொள்ளலாம். அவர்கள் சுதந்திரமாக பணிபுரியலாம் என்று தெரிவிக்கிறார் அவர்.

மேலும் இருநிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு காப்பீடு போன்ற திட்டங்களை வழங்குவதாகவும் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: