You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: 'சித்திரவதை செய்து கொல்லப்பட்ட' நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
நூற்றுக்கணக்கானோர் உடல்கள் கண்டெடுப்பு
சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த இடம் ஒன்றில், நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி முகமையான சனா கூறியுள்ளது.
கண்டுடெக்கப்பட்ட உடல்களில் 'சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட' அறிகுறிகள் தென்படுவதாக அந்த செய்தி கூறுகிறது.
கொலைசெய்யப்படும் முன்பு அவர்களில் சிலரது கண்களும் கைகளும் கட்டப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் பெண்களும் அடக்கம்.
மைக்கேல் கோஹெனுக்கு மூன்றாண்டு சிறை
'டிரம்புக்காக நான் துப்பாக்கித் தோட்டாக்களையே எதிர்கொள்வேன்,' என்று ஒரு காலத்தில் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், தற்போது 'டிரம்ப் செய்த மிகவும் மோசமான செயல்களை மூடி மறைக்க வேண்டியது என் கடமை என நினைத்தேன்,' என்று கூறியுள்ளார்.
2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக நடத்தப்படும் விசாரணையில் இவருக்கு 36 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மார்ச் மாதம் முதல் சிறையில் கழிக்க வேண்டும்.
டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை, டிரம்ப் உடன் உறவில் இருந்த பெண்களுக்கு முறைகேடாக மடைமாற்றம் செய்தது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு அவருக்கு இந்த மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருநாட்கள கழித்து மீட்கப்பட்ட இளைஞர்
கலிபோர்னியாவில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் சிக்கியிருந்த 29 வயது நபர் ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது சிகிச்சையில் இருக்கும் அந்த நபர், கடையில் திருடும் நோக்கில் அதற்குள் வந்தாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரீசா மே வெற்றி
பிரிட்டனில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை நடந்த பிரதமர் தெரீசா மே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
தெரீசா மே நேற்றைய தினம் வெற்றிபெற்று விட்டதால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.
பழமைவாத கட்சியின் எம்பிக்கள் மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 பேரின் ஆதரவை பெற்றார் தெரீசா மே. சுமார் 63% வாக்குகளை அவர் வென்றுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :