You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸ் அதிபரை போல வயதில் மூத்தவரை திருமணம் செய்த தமிழக ஆண்கள்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில், இமானுவெல் மக்ரோங்(39) வெற்றி பெற்றதும், அவரை விட பிரபலமானார் அவரது மனைவி பிரிகெட்டி(64). மக்ரோங்கை விட பிரிகெட்டி 25 வயது பெரியவர் என்ற செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இருவருக்கும் இடையில் உள்ள வயது வித்தியாசம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.
ஆணுக்கு வயது அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் இருக்கும் நிலையில்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன.
மக்ரோங்-பிரிகெட்டி போல, தன்னை விட அதிக வயது கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் எதிர்கொண்ட கேள்விகள் என்ன, அவர்களின் வாழ்க்கை எத்தகையது?
பலர் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனர், சிலர் பெண்ணுக்கு அதிக வயது என்பதை ஒரு தடையாக பார்க்கவில்லை என்றும், சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள வயது வித்தியாசத்தை தாண்டி, தாங்கள் எடுத்த முடிவுதான் சிறந்த முடிவு என்று பிபிசி தமிழிடம் கூறினர்.
பிற செய்திகள் :
பிரான்ஸ் அதிபர் மக்ரோங் 25 வயது வித்தியாசத்தில், திருமணம் செய்துள்ளார் என்று தெரியவந்ததும் அதை தனது மகள் நிலா கொண்டாடியதாக கூறுகிறார் புதுச்சேரியை சேர்ந்த கல்வியாளர் சாலை செல்வம் என்ற பெண்மணி. 49 வயதான சாலை செல்வத்தின் கணவர் செந்தில் அவரைவிட 9 வயது இளையவர்.
வயதில் குறைந்த செந்திலை திருமணம் செய்துகொண்டதால், இளமையாக உணர்வதாக கூறுகிறார் செல்வம்.
''எங்களுடையது காதல் திருமணம். இருவருக்கும் மத்தியில் வயது தடையாக இருப்பதாக உணரவில்லை. ஆனால், எங்கள் மகளுக்கு அதை புரியவைப்பதில் சிரமம் இருந்தது. மக்ரோங் பற்றி படித்தபோது எனது மகள் உற்சாகமாகிவிட்டாள்,''என்றார் செல்வம்.
39 வயதில் சுகப்பிரசவம்
''இருவரும் கலந்து பேசி முடிவு எடுப்போம். என் அனுபவத்தில் இருந்து கருத்து சொன்னால், அதை செந்தில் ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய கற்பிதங்களை உடைப்பது போல எனது மகளை 39 வயதில் சுகப்பிரசவத்தில் பெற்றேன்,'' என்றார் செல்வம்.
முதலில் நண்பர்கள் தன்னை தடுத்ததாக கூறிய செந்தில் அவர்களை சமாளித்த விதம் பற்றி கூறுகிறார்.
''பெண்ணுக்கு வயது அதிகம் என்றால், கணவனை மதிக்கமாட்டார், எல்லா விஷயங்களிலும் தன்னை முன்னிறுத்துவார் என்றும் கூறினார்கள். சமூகம் இது போல பல கருத்துக்களை நம் மீது திணிக்கும். பலர் ஆச்சரியப்படும் வகையில், நாங்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளோம்,'' என்கிறார் ஓவியர் செந்தில்.
இந்த வித்தியாசமான திருமணத்தை செல்வத்தின் பெற்றோர் ஆதரித்ததாகவும், செந்தில் தனது குடும்பத்திற்கு வயது வித்தியாசம் பற்றி திருமணத்திற்கு முன் சொல்லவில்லை என்றும் செல்வம் மற்றும் செந்தில் தெரிவித்தனர்.
காதல் வாழ்க்கையில் கடந்துவந்த கசப்பான அனுபவங்கள்
''அப்பாவிடம் சொன்னபோது, எங்கள் ஊரில் அயீஷாமா என்பவர் தன்னை விட 12 வயது அதிகமான நபரை திருமணம் செய்திருந்தார், மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்றார். வயதை விட என் விருப்பம் முக்கியம் என்று அப்பா பார்த்தார்,'' என்கிறார் செல்வம்.
''மகிழ்ச்சி நாம் தேர்வு செய்வதில் உள்ளது. நம் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதில் எந்த சிக்கலும் இல்லை. பிறரின் பார்வைக்காக வாழ்வதில் எங்களின் நிம்மதியை எதற்கு இழக்கவேண்டும்?'' என்கிறார் செந்தில்.
தன்னில் சரிபாதியாக உணரும் இருவரும் தங்களை முழுமையாக நேசிப்பதால் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சிரமமில்லை என்கிறார்கள்.
செல்வம், செந்தில் போன்ற மற்றொரு தம்பதிக்கு, வலி மிகுந்த அனுபவங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.
சென்னையை சேர்ந்த சிம்மச்சந்திரனுக்கும், அவரது மனைவி லலிதாவுக்கும் 11 ஆண்டுகள் வயது வித்தியாசம். ஐந்து வயதில் போலியோவால் இடது கால் செயல் இழந்ததை அடுத்து, பல தருணங்களில் உடலில் உள்ள குறையால் மனஉளைச்சலுக்கு ஆளானவர் சிம்மசந்திரன்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான சிம்மச்சந்திரன், உடல் குறை பற்றி திருமணத்திற்கு பிறகு வருந்தவில்லை, அதற்கு காரணம் வாழ்க்கைத் துணை லலிதா என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்
''குடும்ப நண்பர்கள் மூலம் லலிதா அறிமுகமானார். எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டது. நம்மை குறை சொல்பவர்களுக்காக வாழ்ந்தால், நம் வாழ்க்கையை எப்போது வாழ்வது?,'' என்ற கேள்வியை முன்வைக்கிறார் சிம்மச்சந்திரன்.
''16 ஆண்டுகளுக்கு முன்பு, 2000-ஆவது ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி (திருமணமான நாள்) முதல், என்னை விட வயது அதிகமாக உள்ள லலிதா, என்னுடைய எல்லா பிரச்சனைகளையும் பங்குபோட்டு கொள்ள துணிந்தார். எங்கள் இருவருக்கும் வயது பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால், உறவினர்கள் குறை கூறியதால், லலிதா குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டார்,'' என்கிறார் சிம்மசந்திரன்.
வாழ நினைத்தால் வாழலாம்
லலிதாவை மகிழ்ச்சியோடு வைத்திருக்க சிம்மச்சந்திரன் தேவையான உதவிகளை செய்யத் தொடங்கியதாக கூறுகிறார். ''என் வேலைகளில் வீட்டை தூய்மை செய்வதும் அடங்கும்,'' என்கிறார் அவர்.
சிம்மசந்திரன்(47) லலிதா (58) தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஒரு சில நாட்கள் இளைய மகன் லலிதாவை பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டாம் என்று கூறியபோது அவருக்கு புரியவில்லை. மகனின் நண்பர்கள் கேலி செய்ததால், அதையும் அவர் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது என்றார்.
''லலிதா வெளியே செல்வது மிகவும் குறைந்துவிட்டது. அதனால் அடிக்கடி நான் அவரை கோயில்களுக்கு அழைத்து செல்கிறேன்,'' என்கிறார். கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 சமண சமய தீர்த்தங்கரர்களின் கோவிலுக்கு சென்ற பயணத்தை நினைவு கூர்ந்தார்.
லலிதா மீதான காதல், தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக கூறும் சிம்மச்சந்திரன் , பெண்ணுக்கு வயது அதிகமாக இருந்தால், பெண் அதிக ஆளுமை செலுத்துவார் என்பது உட்பட பல கற்பிதங்கள் தன்னுடைய வாழ்க்கையில் பொய் என்கிறார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்