மான்செஸ்டர் தாக்குதல்: இதுவரை அறிந்தவை என்ன?

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடுப்பு குறித்து இதுவரை நமக்கு தெரிந்தவை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • இசை கச்சேரி முடிந்து மக்கள் பெருங் கூட்டமாக வெளிக் கதவுகள் மூலமாக வெளியேறத் தொடங்கிய போது இத்திடலுக்கு வெளியே குண்டுவெடுப்பு நடந்ததாக குண்டுவெடிப்பு நடந்த அரீனாவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

• திங்கள்கிழமை இரவு பிரிட்டன் நேரம் 10.35-க்கு மான்செஸ்டர் பெருநகர போலீசார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். இப்பகுதியை சுற்றி இருந்த சாலைகள் உடனடியாக மூடப்பட்டன.

•இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இதனை அதி பயங்கரமான பயங்கரவாத தாக்குதலாக போலீசார் கருதுவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

•தங்களுக்கு இத்தாக்குதல் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் வரை, இதனை தாங்கள் பயங்கரவாத சம்பவமாக கருதப்போவதாக மான்செஸ்டர் பெருநகர போலீஸ் தலைமை அதிகாரி இயான் ஹாப்கின்ஸ் தெரிவித்தார்.

•இது ஒரு பயங்கரவாத சம்பவமாக உறுதி செய்யப்பட்டால், கடந்த 2005 ஜுலையில் 56 பேர் கொல்லப்பட்ட லண்டன் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பிரிட்டனில் நடந்த மிக மோசமான பயங்கரவாத அட்டூழியமாக இது கருதப்படும்.

•ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடப்படாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

•சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் மற்றும் நட்டுகள் பரவி கிடந்ததாகவும், அவ்விடத்தில் வெடிமருந்துகளின் வாசனை மிகுந்து இருந்ததாகவும் குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

•இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தனது பொது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் நடக்கவுள்ள அரசின் அவசர கூட்டமான கோப்ரா குழு கூட்டத்தில் தலைமையேற்கவுள்ளார்.

•குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள விக்டோரியா ரயில் நிலையத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுளனர். மேலும், செவ்வாய்க்கிழமையன்று அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்பான செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்