You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?
பெண்கள் மாதவிடாய் காலங்களில் தூய்மையற்று இருப்பார்கள், அதனால் அவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது என்று எண்ணுபவரா நீங்கள்? இந்த கருத்தைத் தெரிவித்த கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம். எம். ஹாசன் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்வில் அவர் இந்த கருத்தை தெரிவித்தவுடன் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, இது தன்னுடைய சுயகருத்து இல்லை என்றும் சமூகத்தில் உள்ள கருத்தை தான் கூறியதாகவும் ஹாசன் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பெண்களிடம் பேசியபோது, பலர் தங்களது அனுபவத்தை பிபிசிதமிழுடன்பகிர்ந்து கொண்டனர்.
கேரளாவின் கொச்சி மாவட்டத்தை சேர்ந்த ருக்குமினி கிருஷ்ணா, மாதவிடாய் இயற்கையான ஒன்று என்பதை புரிந்துகொள்ளவதற்கு பதிலாக ஓர் அரசியல் தலைவர் தூய்மையற்றது என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
''நாம் நவீன தொழில்நுட்பம் வேண்டும் என்கிறோம், உடை, உணவு, வாழ்க்கைமுறையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். மாதவிலக்கு பற்றி மட்டும் ஏன் பழங்கால கதையை மாற்றவேண்டாம் என்று எண்ணுகிறோம்,''என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த செய்தியும் உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தலாம்: வந்தே மாதரம் பாடினால்தான் கவுன்சிலர் பதவி தப்புமா?
''ஒரு வேளை ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாக இருந்திருந்தால் இதுபோல ஹாசன் பேசவாய்ப்பில்லை என்று நினைக்கிறன். மாதவிலக்கின் போது வழிபாட்டு தலங்களுக்கு போகலாம், போகவேண்டாம் என்பதில், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஏற்றவாறு தேர்வை செய்துகொள்ளுவது தான் சிறந்தது,'' என்று கூறினார் ருக்குமினி கிருஷ்ணா.
திருச்சூரில் வசிக்கும் ஜெனிஃபர் டி சில்வா, மத்திய அரசின் உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். ஹாசனின் கருத்தை சில பெண்களும் கூறகேட்டிருப்பதாக தெரிவித்தார்.
''என்னுடைய தோழிகள் சிலர் மாதவிடாய் காலங்களின் போது தூய்மையற்று இருப்பதாக தங்களது குடும்பத்தினர் கூறியதாக சொல்வதுண்டு. கடவுள் எல்லா இடங்களிலும், எப்போதும் இருப்பதாக நம்பும் பலர், மாதவிலக்கின் போது வழிபாடு செய்யக்கூடாது என்று எண்ணுவது முரணானது. இயற்கையை படைத்த கடவுள் இயற்கையான மாதவிலக்கை ஏற்றுக்கொள்வார்,'' என்கிறார் ஜெனிஃபர்.
தேவாலயங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜெனிஃபர், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்றார்.
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுரிகளில் பெண்களின் உடல்நலம் மற்றும் மாதவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை, ''சிறுவயதில் மாதவிலக்கு தூய்மையற்றது என்று கூறினால் வளர்ந்தபிறகு, அறிவியல் ரீதியாக அந்த கருத்து தவறு என்று தெரிந்தாலும் அதை ஏற்பதில் பெண்களுக்கு மனச்சிக்கல் இருக்கும்.'' என்றார்.
தன்னுடைய கருத்தரங்கத்திற்கு வந்த பல கல்லூரி பெண்கள் தற்போது கோயில் திருவிழாக்களில் மாதவிலக்கின்போது பங்கேற்கிறார்கள் என்று மணிமேகலை தெரிவித்தார்.
''பொதுவெளியில் பேசுபவர்கள் பெண்களின் உடல்நலத்தில் அக்கறையுடன் பேசவேண்டும். சமூகத்தின் பிற்போக்கான கருத்தை மாற்றவேண்டியது அரசியல்வாதிகளின் கடமை. அவர்களே பிற்போக்குத்தனத்தை திணிக்கக்கூடாது ,'' என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்