You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் மக்கள் தொகை: "பெண்களை கணக்கெடுக்க பெண் பணியாளரில்லை"
பாகிஸ்தானில் தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது. சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் கணக்கெடுப்பாளர்களும் இரண்டு லட்சம் பாதுகாவலர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து இருபதாயிரம் கணக்கெடுப்பாளர்களில் வெறும் இருபதாயிரம் பேர் மட்டுமே பெண்கள். அதிலும் கைபர் பக்துன்கவா மற்றும் ஃபடா ஆகிய இரண்டு பிராந்தியங்களிள் கணக்கெடுப்பாளர்களாக பெண்களே இல்லாமலிப்பதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மக்கள் தொகயில் சரிபதியாக இருக்கும் பெண்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களில் காணாமல் போவதெப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுமார் இரண்டே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட கைபர் பஃக்தூன் ஹுவா பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண் கணக்கெடுப்பாளர்கள் மத்தியில் வெறும் 20 பெண்களை மட்டுமே இதற்காக பணியில் அமர்த்தியுள்ளது பாகிஸ்தான் மக்கள் கணக்கெடுப்புத்துறை.
இந்த பிராந்தியத்தின் தலைநகர் பெஷாவர் நகரில் ஒரே ஒரு பெண் கூட மக்கள் தொகை கணக்கெடப்பாளர் பணிக்கு நியமிக்கப்படவில்லை.
அதேபோல பஃடா என்கிற பாகிஸ்தானின் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் மலைவாழ் பிரதேசங்களில் கணக்கெடுப்பாளர்களில் ஒரே ஒரு பெண் கூட இல்லை.
பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையும் உள்ளூராட்சி நிர்வாகமும் இந்த பணியாளர்களை நியமிக்கின்றன. இந்த பணிக்கான திறன்கள் பெண்களிடம் இல்லாமலிருப்பதாக நிர்வாகம் கருதுவதாகவும் இந்த பணிக்கு பெண்கள் அமர்த்துவது அவர்களின் பாதுகாப்பு பிரச்சனையை மோசமாக்கும் என்று கருதுவதாலும் இதில் பெண்கள் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
"கணக்கெடுப்பாளர்களாக ஆண் ஆசிரியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தும்படி அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. ஏனென்றால் இது மிகவும் தொழில்நுட்பத்திறன் தேவைப்படும் பணி. ஆணங்களை நிரப்புவதற்கு சிலவகை பயிற்சிகள் தேவை. இது மிகவும் கடினமான பணி விடியற்காலை சென்று இரவில் வீடு திரும்ப வேண்டிவரும். முழுநாளும் வேலை செய்யவேண்டி வரும்", என்று பிபிசியிடம் தெரிவித்தார் பெஷாவர் நகர துணை ஆணையர் அல்தாஃப் அஹ்மத் ஷேக்.
தற்போதைய முதல் கட்ட கணக்கெடுப்பில் பஃடா பிராந்தியத்திலுள்ள மலைவாழ்மக்களுக்கான ஒரே பகுதியான ஓரக்சாய் பகுதியில் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இங்கே பெண் கணக்கெடுப்பாளர்கள் இல்லாதது கூடுதலாக உணரப்படுகிறது.
"மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கடுமையான பாதுகாப்பு அவசியம் என்பதை உணர்ந்துள்ள அரசு அதற்காக இரண்டு லட்சம் பாதுகாப்பு பணியாளர்களை நியமித்திருக்கிறது. அது அவசியம் செய்யவேண்டிய செயல். அதேபோல இந்த பகுதியின் கலாச்சார மரபுவழிப்படி பெண்கள் குடும்பத்துக்கு வெளியிலிருந்து வரும் ஆண்களிடம் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கும் அரசாங்கம் இதற்காக பெண்களை பணியில் அமர்த்தியிருக்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை? பாதுகாப்புக்காக செலவிடமுடியுமானால் பெண்களுக்காகவும் செலவிடலாமே?", என்கிறார் மலைவாழ் மகளிர் கூட்டமைப்பு தலைவி மருத்துவர் நவ்ரீன் நஸீர்.
தொண்டு நிறுவனங்கள், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் பெண்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படாமையை தொடர்ந்து விமர்சித்து வந்தாலும் பாகிஸ்தான் அரசாங்கம் இதை தீர்ப்பதற்கான முன் முயற்சிகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்