You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தபால் அட்டையில் `தலாக்' சொல்லி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது
தனது இரண்டாவது மனைவியை தபால் அட்டை மூலம் விவாகரத்து செய்வதாக அறிவித்த நபர், மனைவியை துன்புறுத்தி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்தார்.
அந்த தபால் அட்டையில் தலாக், தலாக், தலாக் (விவகாரத்து) என்று மூன்று முறை எழுதியிருந்தார்.
இந்தியாவில், மனைவியை விவாகரத்து செய்ய விரும்பும் முஸ்லிம்கள், மூன்று முறை தலாக் சொல்லி, விவாகரத்து செய்யலாம்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட ஹனீஃப், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
"திருமண நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. அவர் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை" என்று துணை போலீஸ் ஆணையர் வி. சத்யநாராயணா தெரிவித்தார்.
"முதலில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம். அதன்பிறகு, எங்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைப்படி, அவரை பாலியல் வல்லுறவு வழக்கில் கைது செய்வோம்" என்றார் போலீஸ் அதிகாரி.
ஹனீஃபுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. முதல் மனைவியின் அனுமதியுடன்தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்லாமிய சட்டப்படி, ஒரு நபர் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள முடியும்.
இரண்டாவது மனைவி புகார் செய்ததன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார்.
மனைவியை தலாக் சொல்லி உடனடியாக விவாகரத்து செய்வதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மகளிர் உரிமை அமைப்புக்கள் இதுதொடர்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தலாக் சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்க இருக்கிறது. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பெரும்லான முஸ்லிம் நாடுகள் தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையை தடை செய்துவிட்டன. இந்தியாவில் மட்டும் இன்னும் தொடர்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்