ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்க திமுக முடிவு
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள சரக்கு சேவை வரிகள் (ஜிஎஸ்டி) அமலாக்க அறிமுக நிகழ்வை புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/Getty Images
இதுகுறித்து, வியாழக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், "வணிகம், தொழில் மற்றும் பொதுமக்களை ஜிஎஸ்டி முறை, எவ்வாறு பாதிக்கும் என யாருக்கும் தெரியவில்லை" என்றார்.
இதுபற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு இதுவரை மத்திய அரசு திருப்தியளிக்கும் விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி அறிமுகக் கூட்டத்தை நள்ளிரவில் நடத்தி, மக்களிடையே விளம்பரம் தேடிக் கொள்ள மத்தியில் ஆளும்டபாரதீய ஜனதா கூட்டணி அரசு முயற்சிக்கிறது என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் மிகப்பெரிய வரிச்சீர்திருத்த முறையாக, "ஒரே நாடு, ஒரே வரி" என்ற நடைமுறையை, ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பட மூலாதாரம், CHANDAN KHANNA/AFP/Getty Images
இதைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது போல, ஜிஎஸ்டி அமலாக்க அறிமுக நிகழ்வை, இரவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில் பங்கேற்குமாறு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால், போதிய திட்டமிடலின்றி, நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என அதிருப்தி தெரிவித்து, இந்த நிகழ்வை புறக்கணிக்கப் போவதாக முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அறிவித்துள்ளன.
மத்தியில் இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில், கடந்த 2011-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாரதீய ஜனதா அதைக் கடுமையாக எதிர்த்தது.
கடந்த 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜிஎஸ்டி மசோதாவில் பாரதீய ஜனதா அரசு திருத்தம் செய்து கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றியது, அதை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. குரல் வாக்கெடுப்பின்போது, திமுகவும் அதன் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்:
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












