சசிகலா சரணடைய அவகாசம் தர உச்சநீதிமன்றம் மறுப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலர் சசிகலா, நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கேட்டு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா பெங்களூரு புறப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் முதலாவது குற்றம் சாட்டப்பட்ட நபரான ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், இவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து, சசிகலா உள்ளிட்ட மூவரும் உடனடியாக சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே, இன்று காலை உச்சநீதிமன்றத்தில் சசிகலா சார்பில் ஓர் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, சரணடைய இரண்டு வாரம் அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமிதவ் ராய் அடங்கிய அமர்வு, தங்கள் தீர்ப்பை மாற்ற முடியாது என்று கூறி, சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
காணொளி: கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதையடுத்து, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், சசிகலா சற்று நேரத்தில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரூ செல்வார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
காணொளி: சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் - வழக்கறிஞர் மணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்














