சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில துளிகள்

பட மூலாதாரம், Getty Images
சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் இன்று(14.2.2017) உறுதி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
1.ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களின் மதிப்பு அவரது வருமானத்திற்கு மேல் 8.12 சதவீதம்தான் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறி அதனடிப்படையில் விடுதலை செய்தது தவறு.
2.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் கிரிமினல் சதி செய்து அதன் பலனாக, அரசு பதவியில் இருந்த ஜெயலலிதா அவரது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்தார் என்பது நிரூபணமாகிறது.
3. இந்தக் குற்றத்தை அரச பதவியில் இருக்கும் ஒருவர் செய்ய, மற்ற மூவரும் துணை நின்றனர்.
4.ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய அரச பதவியில் இருந்த நபர் இறந்து விட்டார் என்ற ஒரு காரணத்தால், அவர் மீதான மேல் முறையீடு நின்று போகலாமே தவிர, அவருக்கு இந்த குற்றத்தை செய்ய துணை நின்ற மற்றவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தபடி தண்டிக்கப்படவேண்டும்.
5.ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு தன் சார்பாகச் செயல்பட சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர் பத்திரம் எழுதித் தந்தது , அவர் தன்னை சட்டச்சிக்கல்களில் இருந்து விடுவித்துக் கொள்ளவே.
6.இந்த 91-96 காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் நிறுவப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்களால் செய்யப்பட்ட ஒரு கிரிமினல் சதியாகவே பார்க்கப்படும். ஒரே நாளில் 10 கம்பெனிகளையெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள். சொத்துக்களை வாங்கியதைத் தவிர இந்த கம்பெனிகள் ஒரு வியாபரத்தையும் செய்யவில்லை.
7.இந்த கம்பெனிகள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து இயங்கின. எனவே, அந்த நிறுவனங்கள் இயங்கியது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்ல முடியாது.
8.சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தங்களுக்கென்று தனியாக வருமானம் இருந்தது என்று கூறினாலும், அவர்கள் ஜெயலலிதாவால் தரப்பட்ட பணத்திலிருந்து ஏராளமான சொத்துக்கள் வாங்கியதும், கம்பெனிகளை நிறுவியதும் , அவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்தது, ஏதோ நட்பு ரீதியில் அல்ல , ஒரு கிரிமினல் சதியின் அங்கமாகவே கூடினர்.
9.அவர்கள் வைத்திருந்த பல்வேறு வங்கிக்கணக்குகளில் ஒன்றிலிருந்து மற்றவற்றிற்கு பணத்தை தாராளமாக புழங்கியது , ஜெயலலிதாவின் தவறாகச் சேர்த்த பணத்தை சட்டபூர்வமானதாக மாற்றி, இந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை வாங்குவதற்காகவே.
10.ஜெயலலிதாவின் பிரதிநிதி வருமான வரித்துறையின் முன் சமர்ப்பித்த மனுவில், ஜெயலலிதா, சசி எண்டர்பிரைஸஸ் நிறுவனத்துக்கு 1 கோடி ரூபாய் தனது பணத்தை பங்கு மூலதனமாக கடனாக வழங்கியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முதலீட்டை ஈடாக வைத்து, ஜெயலலிதா கடன் வாங்கியிருக்கிறார். எனவே ஜெயலலிதா இந்த நிறுவனங்களில் சம்பந்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து சில துளிகள்
விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பு குற்றச்சாட்டுகள்:
1.1987 வரை ஜெயலலிதாவுக்கு இருந்த சொத்து மதிப்பு 7.5 லட்சம் ரூபாய்
2.1991 ஜுன் மாதம் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு இருந்த சொத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்.
3.1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் நடத்தியதாகக் கூறப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை - 32. இவை அனைத்தும் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் இருந்தன.
4.இந்த நிறுவனங்கள் எதுவும் உருப்படியாக எந்த ஒரு தொழிலையும் செய்யவில்லை. வரி ஏதும் கட்டவில்லை.
5.ஜெயலலிதாவும் 1987-88லிருந்து 1992 நவம்பர் வரை வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி கேட்டவுடன் 1992 நவம்பரில் வரி கணக்கை தாக்கல் செய்தார்.
6.1.7.91லிருந்து ஜெயலலிதா பெயரில் மட்டுமல்லாமல், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களிலும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. இவர்கள் வருமானத்துக்கோ அல்லது இந்த நிறுவனங்களின் வருமானத்துக்கோ பொருந்தாத வகையில் சொத்துக்கள் வாங்கப்பட்டன.
7.இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள் என்பதையும், முதல் குற்றம் சாட்டப்பட்ட நபரான, ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவி வகித்தார் என்பதையும் வைத்துப் பார்த்தால், இவை அனைத்தும் ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களே என்பது புலனாகிறது.
8.முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கும் அவரது கூட்டாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு இடையே ஏற்பட்ட கிரிமினல் சதியை அடுத்து அவர்கள் நால்வரும் சுமார் ரூ 66.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்தனர். இது இந்த காலகட்டத்தில் (1.7.1991 to 30.4.1996) அவர்களுக்கிருந்த தெரிந்த வருமான ஆதாரங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













